செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு லோடுகள் தேக்கம்


செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு லோடுகள் தேக்கம்
x

பாய்லரில் ஏற்பட்ட பழுதால் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு லோடுகள் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா தென்தண்டலம் கிராமத்தில் செய்யாறு கூட்டுறவு சக்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந்தேதி கரும்பு அரவை தொடங்கியது. அரவை தொடங்கிய நிலையில் பாய்லர் பழுதாகி 300-க்கும் மேற்பட்ட லாரிகளில் டன் கணக்கில் கரும்புகள் தேக்கம் அடைந்தது. சில நாட்களுக்கு பிறகு பாய்லர் பழுது நீக்கி அரவையை தொடங்கினர்.

இந்த நிலையில் கடந்த 29-ந்தேதி பாய்லரில் மீண்டும் பழுது ஏற்பட்டு, 4 நாட்களாக 400-க்கும் மேற்பட்ட கரும்பு லோடுகள் தேக்கம் அடைந்து வெயிலில் காய்ந்து எடை இழப்பு ஏற்படும் சூழல் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கரும்பு லோடு கொண்டு வந்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்யாமல் ஆலை நிர்வாகம் அலட்சியப்படுத்தி வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆலையில் காத்திருக்கும் கரும்புகளை எடையிட்டு அரவையை தொடங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகள் கூறுகையில், பாய்லரில் ஏற்பட்டுள்ள பழுது சரிசெய்யப்பட்டு கரும்பு அரவை பணி விரைவில் தொடங்கும் என்றனர்.


Next Story