325 மாணவர்களுக்கு ரூ.10.39 கோடி கல்விக்கடன்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்லூரி படிப்பிற்கான கல்விக்கடன் பெற சிறப்பு முகாம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் முன்னோடி வங்கி மூலம் முகாம் நிறைவடைந்தது. 2 நாட்களாக நடந்த இந்த முகாமில் திருப்பூர் மாவட்ட முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து கல்விக்கடன் பெற பெற்றோர்களுடன் மாணவர்கள் கலந்துகொண்டனர். மேலும் இந்த முகாமில் அரசு மற்றும் தனியார் வங்கி உள்ளிட்ட 18 வங்கிகள் கலந்துகொண்டன. திருப்பூரில் மொத்தமாக 440 மாணவர்கள் கலந்துகொண்ட இந்த முகாமில் 325 மாணவர்களுக்கு ரூ.10.39 கோடி அளவில் கடன் ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டது. மேலும் அரசின் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்களான தாட்கோ, மாவட்ட தொழில் மையத்தின் கடன் திட்டங்கள், பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வங்கிகள் அதனை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி சாலையோர வியாபாரிகளுக்கான விண்ணப்பங்களை விரைந்து பரீசிலனை செய்து கடன் வழங்க அறிவுறுத்தினார். மேலும் அரசின் காப்பீடு திட்டங்கள் குறித்தும், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் மீதான குறைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. முகாமில் பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரீசிலனை செய்யப்பட்டு விரைந்து கல்விக்கடன் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.