கைம்பெண்களுக்கான கடன் தொகை ரூ.50 ஆயிரமாக உயர்வு: கலெக்டர் செந்தில்ராஜ்


கைம்பெண்களுக்கான கடன் தொகை ரூ.50 ஆயிரமாக உயர்வு: கலெக்டர் செந்தில்ராஜ்
x
தினத்தந்தி 19 May 2023 12:15 AM IST (Updated: 19 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கைம்பெண்களுக்கான கடன் தொகை ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான கடன் தொகை ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கடன் தொகை

தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் மூலம் கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு, அவர்களின் அவசர நிதி தேவைகளுக்கும் மற்றும் தையல் கடை, இட்லிகடை, காய்கறி கடை, பழக்கடை, மீன்கடை, பூக்கடை, பால்கடை, துணி வியாபாரம், கூடை முடைதல் போன்ற சிறுதொழில்களுக்கு கடனாக ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது வரை 310 பேருக்கு ரூ.57 லட்சம் கடன் வழங்கப்பட்டு உள்ளது. அந்த கடன் தொகையை ரூ.25 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்கவும், கடனை திருப்பி செலுத்தும் காலத்தை 120 நாட்களில் இருந்து 350 நாட்களாக நீட்டித்தும் கூட்டுறவு சங்க பதிவாளரால் ஆணை வழங்கப்பட்டு உள்ளது.

பயன்பெறலாம்

இந்த கடன் தனிநபர் பிணையத்தின் பேரில் வழங்கப்படுகிறது. எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், ஆதரவற்ற விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் இந்த கடன் பெற ஏதுவாக ஆதார் அட்டை நகல், ஸ்மார்ட் கார்டு நகல், நிரந்தர சேமிப்பு கணக்கு அட்டை நகல், வருமான சான்று மற்றும் கடன்தாரர் வியாபாரம் செய்யும் இடத்துக்கான ஆதாரம் ஆகிய ஆவணங்களுடன், அருகில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளை நேரில் அணுகி பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story