1,344 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.98.30 கோடி கடன் உதவி


1,344 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.98.30 கோடி கடன் உதவி
x

1,344 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.98.30 கோடி கடன் உதவிகளை கலெக்டர் அனீஷ்சேகர் வழங்கினார்.

மதுரை

1,344 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.98.30 கோடி கடன் உதவிகளை கலெக்டர் அனீஷ்சேகர் வழங்கினார்.

வேளாண்மை வளர்ச்சி நிதி

மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கும் விழா திருச்சியில் நேற்று நடந்தது. அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாநிலம் முழுவதும் மகளிர் சுய உதவிகளுக்கு கடன் உதவிகள் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கும் விழா, திருப்பாலையில் உள்ள கல்லூரியில் நேற்று நடந்தது. கோ.தளபதி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன் முன்னிலை வகித்தார். கலெக்டர் அனீஷ் சேகர், மதுரை மாவட்டத்தை சேர்ந்த 1,344 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழக அரசு 1989-ம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி உதவியுடன் வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருந்த மகளிரை கொண்டு மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் சுய உதவிக்குழுக்களை அமைக்க தொடங்கியது. மகளிரின் முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்ட இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு மகளிரை கொண்டு சுய உதவிக்குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்கி, முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் அவர்கள் வருமானம் ஈட்டும் தொழில் தொடங்க வங்கிக்கடன் இணைப்புகள் ஏற்படுத்தி சுய உதவிக்குழு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறது.

கடன் உதவி

தற்போது நலிவடைந்தவர்களை ஒருங்கிணைத்து சிறப்பு குழுக்களும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களை கொண்ட குழுக்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு முதல்-அமைச்சர் கடன் உதவிகளை வழங்கினார். மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த ஊரக பயனாளிகளான 777 பயனாளிகளுக்கு ரூ.64.99 கோடி மதிப்பீட்டிலும், நகர்ப்புற பயனாளிகளான 607 பயனாளிகளுக்கு ரூ.32.36 கோடி மதிப்பீட்டிலும் கடனுதவிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளன.

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 23 சமுதாய பண்ணை பள்ளிகள் தொடங்கிட ரூ.24.30 லட்சம் மற்றும் இணை மானியமாக 18 குழுக்களுக்கு ரூ.71 லட்சமும் என மொத்தம் ரூ.98.30 லட்சம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பூமிநாதன் எம்.எல்.ஏ., மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் காளிதாசன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் குருமூர்த்தி, வேளாண்மை துறை இணை இயக்குநர் விவேகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story