விழுப்புரம் மாவட்டத்தில்103 பயனாளிகளுக்கு கடனுதவிகலெக்டர் மோகன் வழங்கினார்


விழுப்புரம் மாவட்டத்தில்103 பயனாளிகளுக்கு கடனுதவிகலெக்டர் மோகன் வழங்கினார்
x
தினத்தந்தி 24 Dec 2022 12:15 AM IST (Updated: 24 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் 103 பயனாளிகளுக்கு கடனுதவியை கலெக்டர் மோகன் வழங்கினார்.

விழுப்புரம்

ஆலோசனைக்கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு கடன் வழங்குவது தொடர்பாக அனைத்து வங்கி அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர், விவசாயிகள் மற்றும் ஏழை, எளிய அடித்தட்டு மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அத்திட்டங்களின் மூலம் மானியத்துடன் கடனுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் விவசாயம் நிறைந்த பகுதியாகும். அதிகப்படியான விவசாயிகள் விவசாய தொழிலையே சார்ந்து இருப்பதால் விவசாயிகள் பருவகாலங்களில் சரிவர விவசாயம் மேற்கொள்ளும் பொருட்டு தமிழக அரசு, வங்கிகள் மூலமாக பயிர்க்கடன், விவசாயக்கடன், டிராக்டர், உழவு எந்திரங்கள் வாங்குவதற்கு மானியத்துடன் கடன் வழங்கி வருகிறது. மேலும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் சிறுதொழில் புரிந்திடும் வகையில் சிறிய அளவிலான கடைகள், உணவகங்கள், துணிக்கடைகள் போன்றவை அமைத்து சுயமாக தொழில்புரிந்திட மானியத்தில் கடனுதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

கடனுதவிகளை பெற வங்கிகளை நாடும் விவசாயிகளுக்கு வங்கிகள், விவசாயிகளிடம் உரிய ஆவணங்களை பெறுவதோடு முறையான வழிகாட்டுதல்களை வழங்கி கடனுதவிகளை வழங்க வேண்டும். எவ்வித மனஉளைச்சலுக்கும் ஆளாகாத வகையில் உரிய நேரத்தில் வங்கி கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். கடனுதவி வழங்க இயலாத விவசாயிகளுக்கு முறையான தகவல் வழங்க வேண்டும் என்றார்.

103 பேருக்கு கடனுதவி

அதனை தொடர்ந்து வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ் 30 சதவீத மானியத்துடன் சுயதொழில் புரிய 10 பேருக்கு ரூ.28,26,192 மதிப்பில் கடனுதவிக்கான காசோலையும், இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மூலம் 93 பேருக்கு ரூ.49 லட்சம் மதிப்பில் கடனுதவி என மொத்தம் 103 பயனாளிகளுக்கு ரூ.77,26,192 மதிப்பில் கடனுதவிகளை கலெக்டர் மோகன் வழங்கினார். பின்னர் வங்கிகளுக்கான 2023 - 2024-ம் ஆண்டிற்கான திட்ட அறிக்கையை வெளியிட்டார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் காஞ்சனா, மாவட்ட வளர்ச்சி மேலாளர் (வங்கி) பாலமுருகன், மாவட்ட முன்னோடி வங்கி அதிகாரி சொர்னாம்பாள், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் வெங்கடாச்சலம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஹரிஹரசுதன், வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல் அலுவலர் ராஜேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story