புதிய தொழில் தொடங்க பிற்படுத்தப்பட்டோருக்கு கடன் உதவி; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க கலெக்டர் வேண்டுகோள்
பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் புதிய தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்படுகிறது. இதை பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த தனி நபர்கள், குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக்கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய பொது காலக் கடன், பெண்களுக்கான புதிய பொற்காலக்கடன், பெண்களுக்கான நுண்கடன், ஆண்களுக்கான நுண்கடன் மற்றும் கறவை மாடு கடன் ஆகிய கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது.
இதற்கான விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
வட்டி விகிதம்
ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடன் உதவி வழங்கப்படும். பொது கால கடன் திட்டம், தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிக பட்சமாக ரூ.15 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை. பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம் ஆகும்.
நுண்கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதம் ஆகும். மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். திட்ட அலுவலரால் (மகளிர் திட்டம்) தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
விண்ணப்பம்
நுண்கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்கள் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையும், ஒரு குழுவிற்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.15 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம்.
பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.30 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க ரூ.60 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதம். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம்.
ஆவண நகல்
விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து சாதி, வருமானம் மற்றும் பிறப்பிட சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவண நகல்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும். ஆகவே இந்த பொருளாதார கடன் உதவி திட்டத்தை தகுதியுள்ள நபர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேற்கண்ட தகவலை கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.