விழுப்புரம் மாவட்டத்தில்சிறுபான்மை சமூகத்தினர் தொழில் தொடங்க கடனுதவிகலெக்டர் பழனி தகவல்


விழுப்புரம் மாவட்டத்தில்சிறுபான்மை சமூகத்தினர் தொழில் தொடங்க கடனுதவிகலெக்டர் பழனி தகவல்
x
தினத்தந்தி 18 May 2023 12:15 AM IST (Updated: 18 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் சிறுபான்மை சமூகத்தினர் தொழில் தொடங்க கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக்கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். சுய உதவிக்குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.20 லட்சமும், சுய உதவிக்குழுக்களுக்கான சிறுதொழில் கடன் ஆண்களுக்கு 8 சதவீதமும், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30 லட்சமும் கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதமும், பெண்களுக்கு 4 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக்குழு கடன் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சமும், ஆண்டிற்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் ஆண்களுக்கு 8 சதவீதமும், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கடன் வழங்கப்படுகிறது.

தொழில்நுட்ப கல்வி

மேலும் சிறுபான்மை மாணவ- மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் வரை 3 சதவீத வட்டி விகிதத்திலும், மாணவர்களுக்கு 8 சதவீதமும், மாணவிகளுக்கு 5 சதவீத வட்டி விகிதத்திலும் ரூ.30 லட்சம் வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

எனவே இம்மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமானச்சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுனர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ், கல்விக்கட்டணங்கள் செலுத்திய ரசீது, செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

இத்திட்டத்தின் கீழ் கடன்பெற விரும்புவோர் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்திலோ, மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்திலோ, விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றிலோ விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story