தொழில் முதலீட்டு கழகம் சார்பில் முதலீட்டு மானியத்துடன் ரூ.1½ கோடி வரை கடன் உதவி


தொழில் முதலீட்டு கழகம் சார்பில் முதலீட்டு மானியத்துடன் ரூ.1½ கோடி வரை கடன் உதவி
x
தினத்தந்தி 20 Aug 2023 12:15 AM IST (Updated: 20 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தொழில் முதலீட்டு கழகம் சார்பில் முதலீட்டு மானியத்துடன் ரூ.1½ கோடி வரை கடன் உதவி வழங்கப்பட உள்ளது. இதற்கான சிறப்பு முகாம் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

நாகப்பட்டினம்

தொழில் முதலீட்டு கழகம் சார்பில் முதலீட்டு மானியத்துடன் ரூ.1½ கோடி வரை கடன் உதவி வழங்கப்பட உள்ளது. இதற்கான சிறப்பு முகாம் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

இதுகுறித்து நாகை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடன் உதவி

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடன் உதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது. இந்த கழகம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டங்களின் கீழ் கடன் உதவி வழங்கி வருகிறது.

நாளை சிறப்பு முகாம்

அதன்படி தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை கிளை அலுவலகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 1-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த தொழில் கடன் முகாமில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் அளிக்கப்படுகிறது.

முதலீட்டு மானியம்

முகாமில் தகுதிபெறும் தொழில்களுக்கு தமிழ்நாடு அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியத்துடன் ரூ.1½ கோடி வரை கடன் உதவி வழங்கப்படும். இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொதுக்கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும்.

இந்த அரிய வாய்ப்பினை நாகை மாவட்ட புதிய தொழில்முனைவோர், தொழில் அதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story