போக்குவரத்து, சரக்கு வாகனம் வாங்க 35 சதவீத மானியத்துடன் கடன் உதவி


போக்குவரத்து, சரக்கு வாகனம் வாங்க 35 சதவீத மானியத்துடன் கடன் உதவி
x

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் போக்குவரத்து, சரக்கு வாகனம் வாங்க 35 சதவீத மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படுகிறது என கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை


மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் போக்குவரத்து, சரக்கு வாகனம் வாங்க 35 சதவீத மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படுகிறது என கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மானியத்துடன் கடன் உதவி

மயிலாடுதுறையில் படித்த, சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள, முதல் தலைமுறைத் தொழில் முனைவோரின் தொடக்க முன்னெடுப்புகளை ஆதரித்து, நெறிப்படுத்தி, ஊக்குவிக்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தினை (நீட்ஸ்) 2012-13 முதல் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த திட்டத்தொகை ரூ.10 லட்சத்துக்கு மேலும், ரூ.5 கோடிக்கு மிகாமலும் உள்ள தொழில் திட்டங்களுக்கு மானியத்துடன் கடன் உதவி வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

வயது வரம்பு

மானியம் திட்டத் தொகையில் 25 சதவீதம் வழங்கப்படுகிறது. ஆனால், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் மானியமாக திட்டத்தொகையில் 10 சதவீதம் வழங்கப்படுகிறது. மானிய உச்சவரம்பு ரூ.75 லட்சம் ஆகும். மேலும், கடனை திரும்பச் செலுத்தும் காலம் முழுவதும் 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற குறைந்தபட்சம் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பட்டம், பட்டயம் படிப்பு படித்து இருக்க வேண்டும். 21 வயதுக்கு குறையாமல் இருக்க வேண்டும். வயது உச்சவரம்பு பொதுப்பிரிவினருக்கு 35 ஆகவும், சிறப்புப் பிரிவினருக்கு 45 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து, சரக்கு வாகனங்கள்

தனிநபர் மட்டுமின்றி தகுதிபெற்ற ஒன்றுக்கு மேற்பட்டோர் இணைந்த கூட்டாண்மை பங்குதாரர் அமைப்புகளும் இத்திட்டத்தின்கீழ் பயன் பெறலாம். முதலீட்டாளர் பங்கு பொதுப் பிரிவினருக்கு திட்டத்தொகையில் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும் செலுத்த வேண்டும்.

இத்திட்டத்தின்கீழ், சேவைப் பிரிவில், மண் அள்ளும் எந்திரங்கள், காங்கிரீட் மிக்சர் வாகனம், ரிக் போரிங் வாகனம், குளிரூட்டப்பட்ட வாகனங்கள் போன்ற நகரும் அலகுகளுக்கு மட்டுமே இது வரை இசைவளிக்கப்பட்டு வந்தது. தற்போது இத்திட்டத்தின்கீழ் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தோர் பயன்பெற, சரக்கு மற்றும் போக்குவரத்துக்கான அனைத்து வகை வணிக வாகனங்களையும் வாங்கி வாடகைக்கு விடுவதற்கான தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம்

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி பெற்ற பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினத்தினர் இந்த திட்டத்தின் கீழ் மானியத்துடன் கடன் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து விவரங்கள் பெற மாவட்ட தொழில் மையம் கச்சேரிரோடு, செந்தில் பைப் வளாகம், 2-வது மாடி, மயிலாடுதுறை என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தினை நேரடியாகவோ, 04364-212295, 9788877322 ஆகிய தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். மேலும், www.msmeonline.tn.gov.in.needs என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story