போலி ஆவணம் பெற்று கடன் வழங்கி மோசடி: வங்கி மேலாளருக்கு 4 ஆண்டு சிறை


போலி ஆவணம் பெற்று கடன் வழங்கி மோசடி: வங்கி மேலாளருக்கு 4 ஆண்டு சிறை
x

போலி ஆவணம் பெற்று கடன் வழங்கி மோசடி செய்த வங்கி மேலாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

கோவை,

திருப்பூரை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 54), தனியார் மில் உரிமையாளர். இவர் தனது மில்லுக்கு புதிய எந்திரங்களை வாங்க முடிவு செய்தார். இதற்காக மாரப்பன் (58) என்பவருடன் சேர்ந்து விலைப்பட்டியல் தயாரித்து கடன் பெறுவதற்காக சாமளாபுரத்தில் உள்ள கனரா வங்கி கிளையில் கொடுத்தார்.

அப்போது அந்த வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்த ராமச்சந்திரன் (65) என்பவர், கந்தசாமிக்கு கடந்த 2016-ம் ஆண்டு ரூ.9 லட்சத்து 97 ஆயிரம் கடன் வழங்கினார்.

போலி விலை பட்டியல்

இந்த நிலையில் வங்கியின் உயர் அதிகாரிகள், அந்த வங்கியில் கணக்குகளை தணிக்கை செய்தனர். இதில் எந்திரங்களுக்கான விலையை போலியாக குறிப்பிட்டு விலைப்பட்டியல் தயாரித்து வங்கியில் சமர்ப்பித்து கந்தசாமி, மாரப்பனுடன் சேர்ந்து கடன் பெற்றது தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதில் இந்த மோசடிக்கு வங்கி மேலாளர் ராமச்சந்திரன் உடந்தையாக இருந்ததும், இதன் மூலம் அவர்கள் 3 பேரும் சேர்ந்து வங்கிக்கு ரூ.10 லட்சத்து 20 ஆயிரத்து 989 இழப்பீடு ஏற்படுத்தி இருப்பதும் தெரியவந்தது

3 பேருக்கு சிறை

இதையடுத்து வங்கி முன்னாள் மேலாளர் ராமச்சந்திரன் மற்றும் கந்தசாமி, மாரப்பன் ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி, கூட்டுசதி உள்பட 4 பிரிவின் கீழ் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை கோவையில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்தது.

இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி வங்கி முன்னாள் மேலாளர் ராமச்சந்திரனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை ரூ.80 ஆயிரம் அபராதம், கந்தசாமி, மாரப்பன் ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி எஸ்.கோவிந்தராஜன் தீர்ப்பு கூறினார்.


Next Story