ரூ.9,929 கோடியில் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை


ரூ.9,929 கோடியில் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 23 Nov 2022 6:45 PM GMT)

கிருஷ்ணகிரியில் நபார்டு வங்கி சார்பில் ரூ.9,929 கோடி மதிப்பிலான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் நபார்டு வங்கி சார்பில் ரூ.9,929 கோடி மதிப்பிலான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டார்.

கடன் திட்ட அறிக்கை

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நபார்டு வங்கி சார்பில் 2023-24-ம் ஆண்டிற்கான ரூ.9,928.92 கோடி மதிப்பிலான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார்.

பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (நபார்டு வங்கி) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வளர் சார்ந்த தகவல்களை சேகரித்து, அதன் மூலம் ரூ.9928.92 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளது என மதிப்பீடு செய்துள்ளது. இது 2022-23-ம் ஆண்டை விட 21.31 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டு வசதி கடன்

அதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 2023-24-ம் ஆண்டுக்கு பயிர் கடன் ரூ.4,159.55 கோடியும், விவசாய முதலீட்டு கடன் ரூ.1,664.41 கோடியும், விவசாய கட்டமைப்பு கடன் ரூ.496.80 கோடியும், விவசாய இதர கடன்கள் ரூ.282.35 கோடியும் என விவசாயத்திற்கான மொத்த கடன் மதிப்பீடு ரூ.6,603.12 கோடி ஆகும். சிறு, குறு, நடுத்தர தொழில் கடன் ரூ.2.274.18 கோடியும், ஏற்றுமதி, கல்வி மற்றும் வீட்டு வசதிக்கான கடன் ரூ.375.71 கோடியும், அடிப்படை கட்டுமான வசதிக்கு ரூ.94.49 கோடியும், சுய உதவிக்குழு மற்றும் கூட்டு பொறுப்பு குழுக்கான கடன் அளவு ரூ.581.40 கோடி என மொத்தம் ரூ.9,928.92 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளதென மதிப்பீடு செய்து, கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

இது போன்ற கடன் வசதிகள், விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்கி விவசாயத்தை ஒரு வளம் நிறைந்த தொழிலாக மாற்ற உதவும். வேளாண்மையில் எந்திரமயமாக்கல், சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசன முறையை பயன்படுத்துதல், கால்நடை வளர்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாக செய்தல், விவசாயிகளின் வருமானத்தை பெருக்க உதவும். இதுபோன்ற முதலீடுகளுக்கு வங்கிகள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குனர் முகமதுஅஸ்லாம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி, நபார்டு வங்கி மேலாளர் ரமேஷ், இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் மகேந்திரன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்னபாலமுருகன், ஸ்டேட் வங்கி மேலாளர் பிரபுகிரண், தமிழ்நாடு கிராம வங்கி மேலாளர் அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story