கைத்தறி கண்காட்சியில் நெசவாளர்களுக்கு கடனுதவிகள்
திருவண்ணாமலையில் கைத்தறி கண்காட்சி தொடக்க நிகழ்ச்சியில் நெசவாளர்களுக்கு கடனுதவிகளை கலெக்டர் வழங்கினார்.
திருவண்ணாமலையில் கைத்தறி கண்காட்சி தொடக்க நிகழ்ச்சியில் நெசவாளர்களுக்கு கடனுதவிகளை கலெக்டர் வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் 9-வது தேசிய கைத்தறி தின விழாவினை முன்னிட்டு சிறப்பு கைத்தறி மற்றும் விற்பனை முகாம் நடந்தது.
முகாமினை கலெக்டர் முருகேஷ் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து முதல் விற்பனை தொடங்கி வைத்தார். கண்காட்சியில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தியாளர்கள் மூலம் நெய்யப்படும் நவீன வடிவமைப்புகளை கொண்ட கண்கவர் கைத்தறி ரகங்கள் இடம் பெற்றன.
அதன்படி ஆரணி பட்டு சேலைகள், காஞ்சி காட்டன் சேலை ரகங்கள், லுங்கிகள் மற்றும் துண்டுகள் விற்பனை செய்யப்பட்டது.
கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து கைத்தறி ரகங்களுக்கும் 20 சதவீதம் அரசு தள்ளுபடி வழங்கப்பட்டது.
தொடர்ந்து கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நெசவாளர் முத்தார திட்டத்தின் கீழ் 15 நெசவாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கடன் உதவி தொகையும், மூலப்பொருள் வினியோக திட்டத்தின் கீழ் 31 பாஸ் புத்தகங்களையும் கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை சரக உதவி இயக்குனர் இளங்கோவன் மற்றும் துறை அலுவலர்கள், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை சார்ந்த பணியாளர்கள் மற்றும் நெசவாளர் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.