தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தேனி மாவட்ட சி.ஐ.டி.யூ. ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊராட்சிகளில் பணிபுரியும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட உள்ளாட்சி ஊழியர் சங்க தலைவர் ஜெயன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயபாண்டி, மாவட்ட பொருளாளர் சண்முகம் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர், மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
இதேபோல் பஞ்சமி நிலங்களை மீட்டு உரிய மக்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.