கோவிலுக்கு வருவாய்த்துறையினர் பூட்டு போட்டனர்
எடப்பாடி அருகே கோவில் வரவு செலவுகளை நிர்வகிப்பதில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட கோவிலுக்கு பூட்டு போட்டனர். அங்கு திரண்ட பக்தர்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
எடப்பாடி
எடப்பாடி அருகே கோவில் வரவு செலவுகளை நிர்வகிப்பதில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட கோவிலுக்கு பூட்டு போட்டனர். அங்கு திரண்ட பக்தர்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இருதரப்பினர் மோதல்
எடப்பாடி ஒன்றியம் குருக்கப்பட்டி அருகே உள்ள கல்மோட்டூர் பகுதியில் அய்யனாரப்பன் கோவில் அமைந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக புனரமைக்கப்பட்ட இக்கோவிலின் வரவு-செலவு கணக்குகளை நிர்வகிப்பது மற்றும் பராமரிப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கிடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வந்தது. இது தொடர்பாக இரு தரப்பினரும் பூலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 22-ந் தேதி எடப்பாடி தாலுகா அலுவலகத்தில், வருவாய்த்துறையினர் முன்னிலையில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கிடையே சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் உரிய தீர்வு எட்டப்படாத நிலையில், மீண்டும் இதுகுறித்து சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது.
கோவிலுக்கு பூட்டு
பாதுகாப்பு கருதி சமாதான பேச்சுவார்த்தை நடைபெறும் வரை, இரு தரப்பினரும் சம்பந்தப்பட்ட கோவிலுக்குள் நுழைந்து எந்த ஒரு நிகழ்வுகளும் மேற்கொள்ளக்கூடாது என வருவாய்த்துறையினர் கூறியிருந்தனர். இந்நிலையில் நேற்று சம்பந்தப்பட்ட ஒரு தரப்பினர் திடீரென அய்யனாரப்பன் கோவிலுக்குள் நுழைந்து விரதம் இருந்து தவ பூஜை நடத்தப்போவதாக கூறினர்.
இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய் துறையினர் மற்றும் போலீசார், சம்பந்தப்பட்ட கோவிலின் பிரதான வாசலுக்கு பூட்டு போட்டனர்.
பக்தர்கள் திரண்டனர்
இந்த நிலையில் நேற்று சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் சமாதான பேச்சுவார்த்தைக்கு பின்னரே பக்தர்கள் கோவிலுக்குள் நுழைய வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட ஒரு தரப்பினர், இந்து முன்னணி நிர்வாகிகளுடன் பக்தர்கள் திரண்டு வந்து அய்யனாரப்பன் கோவில் பிரதான வாசல் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் கூடுதல் எண்ணிக்கையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தொடர்ந்து பக்தர்கள் கோவில் பகுதியில் அமர்ந்து இருப்பதால் அங்கு பதற்ற மான சூழல் நிலவியது.