குடும்பத்தினரை வீட்டில் பூட்டி வைத்து விட்டுகிணற்றில் குதித்த விவசாயி உடலை மீட்டு போலீசார் விசாரணை


குடும்பத்தினரை வீட்டில் பூட்டி வைத்து விட்டுகிணற்றில் குதித்த விவசாயி உடலை மீட்டு போலீசார் விசாரணை
x

குடும்பத்தினரை வீட்டில் பூட்டி வைத்து விட்டு கிணற்றில் குதித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை,

குடும்பத்தினரை வீட்டில் பூட்டி வைத்து விட்டு கிணற்றில் குதித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

விவசாயி

ஜோலார்பேட்டையை அடுத்த திரியாலம் முன்னாள் தலைவர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் முனிரத்தினம் (வயது 65). விவசாயி. இவரது மனைவி பார்வதி. இவர்களுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

முனிரத்தினம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பினார். இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர்.

குதித்தார்

இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த முனிரத்தினம் நள்ளிரவு 12 மணியளவில் தூங்கிக்கொண்டிருந்த குடும்பத்தினரை உள்ளே வைத்து பூட்டிவிட்டு தனக்கு சொந்தமான கிணற்றில் குதித்தார்.

சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்க்க முயன்றபோது கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்ததையும், உள்ளே தங்களுடன் தூங்கிக்கொண்டிருந்த முனிரத்தினம் இல்லாததையும் கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர்.

அருகில் வசிப்பவர்கள் எழுந்து வந்து கதவை திறந்தனர் அப்போது கிணற்றுக்குள் முனிரத்தினம் குதித்து தத்தளிப்பதை பார்த்து கதறினர்.

தீயணைப்பு படை

உடனே மகன் ரவி கிணற்றில் குதித்து தந்தையை காப்பாற்ற முயன்றார். ஆனால் முடியாததால் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) கலைமணி தலைமையில் வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் இறங்கி மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதற்குள் முனிரத்தினம் இறந்து விட்டார். அவரது உடலை தீயணைப்பு படையினர் கயிறு கட்டி வெளியே கொண்டு வந்தனர்.

விசாரணை

முனிரத்தினத்தின் உடலை ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நோய் பாதிப்பால் விரக்தி அடைந்த விவசாயி குடும்பத்தினரை வீட்டுக்குள் பூட்டி வைத்து விட்டு நள்ளிரவில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


Next Story