மாடுகளை பிடித்து ஏலம் விடப்படும்
போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து ஏலம் விடப்படும் என்று பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் குமரன் எச்சாிக்கை விடுத்துள்ளாா்
பட்டுக்கோட்டை,
போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து ஏலம் விடப்படும் என்று பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் குமரன் எச்சாிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சாலையில் திரியும் மாடுகள்
பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் கால்நடைகள் வளர்த்து வரும் பொதுமக்கள் சிலர் தங்களது வீட்டில் வளர்க்கும் பசு மாடுகளை பிரதான சாலையில் தினமும் சுற்றி திரிய விடுகிறார்கள். இதனால் போக்குவரத்துக்கு இடையூறும் விபத்துகளும் ஏற்படுகிறது. பொது இடங்களில் சுற்றி திரியும் மாடுகள் சாலைகளில் சாணம் இடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.மேலும் கடைகளில் விற்பனைக்கு வைத்துள்ள காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களையும் மாடுகள் சேதப்படுத்துகிறது.
ஏலம் விடப்படும்
கடந்த காலங்களில் தெருவில் சுற்றும் மாடுகள் நகராட்சி மூலம் பிடிக்கப்பட்டு அபராதம் விதித்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும் கால்நடை வளர்ப்பவர்கள் மறுபடியும் தங்கள் மாடுகளை தெருவில் சுற்றித் திரிய விடுகிறார்கள். தெருவில் சுற்றும் மாடுகளினால் ஏற்படும் தொல்லைகள் குறையவில்லை. எனவே பட்டுக்கோட்டை நகர பகுதியில் கால்நடைகள் வளர்ப்பவர்கள் தங்களது கால்நடைகளை தொழுவத்தில் பராமரிக்க வேண்டும்.இனி வரும் காலங்களில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாகவும் விபத்துக்கள் மற்றும் பொருட்கள் சேதம் ஏற்பட காரணமாக உள்ள சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு நகராட்சி மூலம் ஏலம் விடப்படும். அல்லது கோசாலையில் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.