லாரியை சிறை பிடித்த தூய்மை பணியாளர்கள்


லாரியை சிறை பிடித்த தூய்மை பணியாளர்கள்
x
திருப்பூர்

மடத்துக்குளம்:

மடத்துக்குளம் அருகே மைவாடி ஊராட்சி தூய்மை பணியாளர்கள் லாரியை சிறைபிடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடிநீர் வினியோகம் பாதிப்பு

மடத்துக்குளம் தாலுகா மைவாடி ஊராட்சியில் 5 கிராம பகுதிகள் உள்ளன. இதில் ராஜாவூர், போளரபட்டி, கவுண்டப்பகவுண்டன் புதூர், மைவாடி பிரிவு ஆகிய பகுதிகளுக்கு ஊராட்சி அருகிலுள்ள தரைமட்ட கிணற்றிலிருந்து (சம்ப்) மின் மோட்டார் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக மைவாடியிலிருந்து இந்த கிராமங்களுக்கு ரோடின் ஓரம் நிலத்தில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் உள்ள இடத்திற்கு மேல் நாற்கர சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

இதில் ஒரு பகுதியாக பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டுமான பணிகளின் போது குடிநீர் வினியோக பிரதான குழாய்கள் அடிக்கடி உடைந்துள்ளது. இதை நாற்கர சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர்கள் சரி செய்து தரவில்லை எனக்கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இதேபோல பிரதான குழாய்கள் உடைந்துவிட்டதால் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

லாரி சிறைபிடிப்பு

இந்த நிலையில் நேற்று, நாற்கர சாலை பணிக்காக இயக்கப்படும் டிப்பர் லாரியை மைவாடி ஊராட்சியின் தூய்மைப்பணியாளர்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தூய்மைப் பணியாளர்கள் கூறியதாவது:-

'அடிக்கடி குடிநீர் வினியோக குழாய்கள் உடைந்துவிடுகிறது. சரி செய்வது இல்லை. பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்த பணியில் ஈடுபட்டுள்ள உயர் அதிகாரிகள் யாரும் இங்கு வருவதே இல்லை. இதனால் லாரியை சிறைப் பிடித்தோம்.' என தெரிவித்தனர்.

ஊராட்சி செயலர் முகமது இசாக் கூறுகையில் "நாற்கர சாலை அமைக்கும் இடத்திற்கு கீழ் 5 குடிநீர் வினியோக பிரதான குழாய்கள் உள்ளன. இதுதவிர திருமூர்த்திமலை கூட்டுக்குடிநீர் திட்ட குழாயும் உள்ளது. சாலை அமைக்கப்பட்டபின்பு, குழாயில் உடைப்பு ஏற்பட்டால் சரி செய்வது மிகவும் கடினமான காரியம். இதற்கு தீர்வாக நாற்கர சாலை உள்ள பகுதியில் குழாய்கள் செல்ல தனியாக சிறிய இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். தற்போது உடைந்துள்ள குழாய்களை சரி செய்து தர வேண்டும்" என தெரிவித்தார்.

இந்த பிரச்சினையால் இந்த பகுதியில் பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அமைதிப்படுத்தியதோடு, இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர். இதற்குப் பின்பு சிறை பிடிக்கப்பட்ட லாரிகள் விடுவிக்கப்பட்டன.


Next Story