லாரி மீது வேன் மோதிய கோர விபத்தில் 4 பேர் பலி; 30 பேர் காயம்
முத்தூர் அருகே லாரி மீது வேன் மோதி கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர். திதி கொடுத்து விட்டு திரும்பியபோது இந்த பரிதாப சம்பவம் நடந்து விட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
இறந்தவருக்கு திதி
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள பாப்பினி பச்சாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். இவர் சில நாட்களுக்கு முன் இறந்து விட்டார். இவருக்கு திதி கொடுக்க கொடுமுடிக்கு செல்ல உறவினர்கள் முடிவு செய்தனர். அதன்படி சந்திரனின் உறவினர்களான பச்சாபாளையத்தை சேர்ந்த கிட்டுசாமி (வயது 47), அதே ஊரை சேர்ந்த சரோஜா (50), காங்கயம்பாளையத்தை சேர்ந்த தமிழரசி (17), பூங்கொடி (48), குமரன் (50), வளர்மதி (26), இந்துமதி (23), காயத்ரி (12) உள்பட 34 பேர் ஒரு வேனில் பச்சாபாளையத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றுக்கு நேற்று காலை சென்றனர்.
அந்த வேனை நத்தக்காட்டுவலசை சேர்ந்த அருண்குமார் (30) என்பவர் ஓட்டிச்சென்றார். அங்கு திதி கொடுத்துவிட்டு மீண்டும் அதே வேனில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
வேன்-லாரி மோதல்
அந்த வேன் முத்தூர் - காங்கயம் சாலை வாலிபனங்காடு பஸ் நிறுத்தம் அருகில் காலை 9.45 மணிக்கு வந்தது. அப்போது எதிரே கேரள மாநிலத்தில் இருந்து மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னை நோக்கி சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரியின் பக்கவாட்டில் வேன் மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் இருந்த சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்தவர்கள் அனைவரும் வேனின் அடியில் சிக்கி "அய்யோ, அம்மா காப்பாற்றுங்கள்" என்று அபயக்குரல் எழுப்பினார்கள். உடனே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வேனின் அடியில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் வேனை நகர்த்த முடியாததால் பொக்லைன் எந்திரம் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது.
4 பேர் பலி
இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் தலைக்குப்புற கவிழ்ந்து கிடந்த வேனை அப்புறப்படுத்தி வேனுக்கு அடியில் படுகாயங்களுடன் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்டனர். ஆனாலும் வேனின் அடியில் சிக்கி பச்சாபாளையத்தை சேர்ந்த கிட்டுசாமி (47), சரோஜா (50), தமிழரசி (17) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட பூங்கொடி (48) காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் காயம் அடைந்த குமரன் (50), வளர்மதி (26), இந்துமதி (23), காயத்ரி (12) உள்பட 30 பேரை மீட்டு சிகிச்சைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர், ஈரோடு, கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
துணை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
விபத்து நடந்த இடத்திற்கு காங்கயம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் வந்து பார்வையிட்டார். காங்கயம் தீயணைப்பு துறையினர் வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன் பின்னர் காலை 11.30 மணிக்கு கிரேன் வரவழைக்கப்பட்டு வேன் அப்புறப்படுத்தப்பட்டது. இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்தூர் அருகே இறந்தவருக்கு திதி கொடுக்க சென்றுவிட்டு திரும்பி வந்த போது 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.