மொபட் மீது லாரி மோதி காகித ஆலை ஒப்பந்த தொழிலாளி பலி
மொபட் மீது லாரி மோதி காகித ஆலை ஒப்பந்த தொழிலாளி பலியானார்.
வேலாயுதம்பாளையம்,
லாரி மோதல்
கரூர் மாவட்டம், வாங்கல் அருகே என்.புதூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் மலையப்பன் (வயது 47). இவர் காகித ஆலை குடியிருப்பு நீரேற்று பகுதியில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் என்.புதூர் வீட்டில் இருந்து புகழூர் காகித ஆலை குடியிருப்பு பகுதிக்கு வேலை பார்ப்பதற்காக கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனது மொபட்டில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது வேலாயுதம்பாளையம் மூலிமங்கலம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் கோயம்புத்தூரில் இருந்து புகழூர் காகித ஆலைக்கு வேஸ்ட் பேப்பர் ஏற்றி வந்த லாரி காகித ஆலைக்கு செல்வதற்காக மூலிமங்கலம் பிரிவில் திடீரென திருப்பியபோது முன்னால் சென்று கொண்டிருந்த மலையப்பன் மொபட் மீது லாரி மோதியது.
பலி
அப்போது ெமாபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட மலையப்பன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மலையப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து மலையப்பனின் மகன் சற்குணபாண்டியன் (21) என்பவர் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி, விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் கரூர் திருக்காம்புலியூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த சுரேந்தர்பாபு மீது வழக்குப்பதிந்து, அந்த லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.