லாரி மோதி விபத்து: பெண் டாக்டர், போலீஸ்காரர் உடல் நசுங்கி பலி
லாரி மோதி பெண் டாக்டர், போலீஸ்காரர் உடல் நசுங்கி பலியானார்கள்.
கோவை,
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கண்மணி பிரியா (வயது 33). இவர் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் சித்தா (பி.எஸ்.எம்.எஸ்) படித்து முடித்து பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சித்தா டாக்டராக பணியாற்றி வந்தார்.
இவருக்கும் கோவை மாநகர போலீஸ் ஆயுதப்படையில் 2-ம் நிலை காவலராக பணியாற்றி வந்த சேலம் மாவட்டம் சுக்கம்பட்டி பெருமனூர் காட்டு வலசு பகுதியை சேர்ந்த ராஜா (25) என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. அத்துடன் கண்மணி பிரியாவுக்கு கோவையை அடுத்த நீலாம்பூர் ராஜீவ்காந்தி நகரில் பேச்சியம்மாள் என்ற தோழியும் உள்ளார்.
லாரி மோதியது
எனவே அவர் தனது தோழியை பார்ப்பதற்காக நேற்று காலையில் கோவை வந்தார். பின்னர் அவர் நீலாம்பூருக்கு சென்று தனது தோழியை சந்தித்து பேசினார். அத்துடன் அவர் கோவை மாநகர பகுதிக்கு வந்து தனது நண்பரான ராஜாவையும் சந்தித்து பேசினார்.
பின்னர் மாலையில் ராஜா, கண்மணி பிரியாவை அவருடைய தோழி பேச்சியம்மாள் வீட்டில் கொண்டு விடுவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்றார். அவர்கள் 2 பேரும் கோவையை அடுத்த நீலாம்பூர் அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிக்கொண்ட 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள்.