திருநங்கை கொலை வழக்கில் லாரி டிரைவர் கைது


திருநங்கை கொலை வழக்கில் லாரி டிரைவர் கைது
x

மாதவரம் அருகே நடந்த திருநங்கை கொலை வழக்கில் லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். உல்லாசமாக இருந்தபோது கூடுதல் பணம் கேட்டு மிரட்டியதால் ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொன்றது தெரிந்தது.

செங்குன்றம்,

எண்ணூர் சுனாமி குடியிருப்பு 116-வது தெருவைச் சேர்ந்தவர் சரவணன் என்ற சனா(வயது 29). திருநங்கையான இவர், கடந்த 22-ந்தேதி மாதவரம் பால் பண்ணை அருகே மஞ்சம்பாக்கம் 200 அடி சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் நிலையம் பின்புறம் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த மாதவரம் பால் பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர், கொலையான திருநங்கை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

லாரி டிரைவர் கைது

இந்த நிலையில் திருநங்கை சனாவை கொலை செய்தது ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்காத்தம் அடுத்த மகாத்மா காந்தி நகரை சேர்ந்த லாரி டிரைவர் கணேசன்(48) என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

ராமநாதபுரத்தில் இருந்து லாரியில் லோடு ஏற்றிக்கொண்டு திருவொற்றியூர் வந்தேன். பசி எடுத்ததால் மாதவரம் மஞ்சம்பாக்கம் பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு சாப்பிடச்சென்றேன்.

கூடுதல் பணம் கேட்டு மிரட்டல்

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த திருநங்கை சனா, என்னை உல்லாசத்துக்கு வரும்படி அழைத்தார். அதற்கு ரூ.500 தரும்படி கேட்டார். பின்னர் நாங்கள் உல்லாசமாக இருந்தோம்.

அப்போது திருநங்கை சனா, உல்லாசமாக இருந்ததற்கு ரூ.5 ஆயிரம் தரும்படி கேட்டு தகராறு செய்தார். இதனால் அவரை நான் தாக்கினேன். உடனே அவர், உன்னை கேவலப்படுத்துகிறேன் என்று கூறி செல்போனில் மற்ற திருநங்கைகளையும் அழைக்க முயன்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நான், சனாவை கீழே தள்ளி அடித்து உதைத்தேன். பின்னர் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் கைதான லாரி டிரைவர் கணேசனை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.


Next Story