மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த லாரி டிரைவர் பலி
க.பரமத்தி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த லாரி டிரைவர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு விபத்தில் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
லாரி டிரைவர் சாவு
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள பள்ளமருதபட்டியை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 29). லாரி டிரைவர். இவர் கடந்த 24-ந்தேதி தனது மோட்டார் சைக்கிளில் பெரியதாதம்பாளையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி சத்யராஜ் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சத்யராஜ் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணராயபுரம்
லாலாபேட்டை அருகே உள்ள திம்மாச்சிபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (62). தொழிலாளி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் சம்பவத்தன்று திம்மாச்சிபுரம் பஸ்நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி மாவட்டம் குழுமணியை சேர்ந்த வினோத்குமார் (30) என்பவர் ஓட்டி வந்த வேன், செல்வராஜ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த செல்வராஜ் முசிறியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.