உடலை துண்டித்து லாரி டிரைவர் கொலை: 'மனைவியை தவறாக பேசியதால் கொன்றேன்'-கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்
தாரமங்கலம் அருகே உடலை துண்டித்து லாரி டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவியை தவறாக பேசியதால் கொன்றேன் என்று கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
தாரமங்கலம்:
உடலை துண்டித்து கொலை
தாரமங்கலம் அருகே பெரியசோரகை மாட்டுக்காரனூரை சேர்ந்தவர் மணி (வயது 50). லாரி டிரைவர். இந்த நிலையில் சம்பவத்தன்று மணியை கைகள் மற்றும் உடலை தனித்தனியாக துண்டித்து கொடூரமாக கொலை செய்து உடலை, அங்குள்ள ஒரு கிணற்றுக்குள் வீசி உள்ளனர்.
இந்த கொடூர கொலை தொடர்பாக தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் போலீசார் சந்தேகத்தின் பேரில் கருக்குப்பட்டியை சேர்ந்த செல்லான் என்கிற செல்வராஜ், துட்டம்பட்டியை சேர்ந்த சக்திவேல் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்வராஜ், மணியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து செல்வராஜை போலீசார் கைது செய்தனர்.
பரபரப்பு வாக்குமூலம்
கைதான செல்வராஜ் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
நானும், டிரைவர் மணியும் கடந்த சில ஆண்டுகளாக ஒரே இடத்தில் வேலை செய்து வந்தோம். நான் மரம் வெட்டும் தொழில் செய்து வருகிறேன். மணி லாரி டிரைவர். நாங்கள் ஒன்றாக பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று மரங்களை வெட்டி கொண்டு வருவோம். வேலை முடிந்ததும் ஒன்றாக மது அருந்துவோம். எங்களுடன் வேலை பார்க்கும் சிலரும் சேர்ந்து ஒன்றாக இறைச்சி சமைத்து சாப்பிடுவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி நானும், மணியும் ஒரு இடத்தில் கிடைத்த காப்பர் கம்பியை எடுத்து வந்து ரூ.1,500-க்கு விற்றோம். அந்த பணத்தில் ஒரு கிலோ பன்றி இறைச்சி எடுத்து கொண்டும், 3 குவாட்டர் மதுபாட்டிலை வாங்கி கொண்டும் எனது வீட்டிற்கு வந்தோம். அங்கு பன்றி இறைச்சியை சமைத்து நான், மணி, சக்திவேல் ஆகியோர் சாப்பிட்டு மது அருந்தினோம், பின்னர் சக்திவேல் அங்கிருந்து சென்றுவிட்டார்.
துண்டு, துண்டாக வெட்டினேன்
நானும், மணியும் தொடர்ந்து மது குடித்ேதாம். அப்போது மணி என்னுடைய மனைவியை பற்றி தவறாக பேசினார். இதனால் அவரை பேச வேண்டாம் என்று கூறினேன். அவர் கேட்காமல் தொடர்ந்து பேசியதால் ஆத்திரம் அடைந்த நான் வீட்டில் இருந்த கொடுவாளை எடுத்துவந்து மணியின் பின்னந்தலையில் அடித்தேன்.
இதில் மணி சுருண்டு விழுந்து மயக்கம் அடைந்தார். நான் அவர் பிழைத்து கொள்வார் என்று நினைத்து அவரை வெட்டி கொன்று விடலாம் என்று எண்ணி வீட்டில் இருந்த கத்தியை கொண்டு முதலில் தலையை துண்டித்தேன். பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டினேன்.
கிணற்றில் வீசினேன்
தொடர்ந்து சாக்குப்பையில் உடலை தனித்தனியாக 3 முறை எடுத்து சென்று அருகில் இருந்த கிணற்றில் வீசினேன். பிறகு அன்று இரவு நடந்த சம்பவத்தை அருகில் வசிக்கும் எனது மகள். மருமகனிடம் கூறி அழுதேன். இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த மகள் மற்றும் மருமகன் ஆகியோர் தாரமங்கலம் போலீசாருக்கு தெரிவித்து விட்டதால், நான் தலைமறைவானேன். இதனிடையே கிணற்றில் இருந்து வெளியே உடல் வந்து மிதந்ததால், போலீசார் அதனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்த நிலையில் அருகில் சோள காட்டில் பதுங்கி இருந்த என்னை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.