ெரயில் என்ஜின் மோதி லாரி டிரைவர் பலி
ெரயில் என்ஜின் மோதி லாரி டிரைவர் இறந்தார்
பேட்டை:
நெல்லையிலிருந்து தென்காசி நோக்கி நேற்று இரவு 8.30 மணி அளவில் ெரயில் என்ஜின் சென்று கொண்டிருந்தது. பேட்டை ெரயில் நிலையம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக ெரயில் என்ஜினில் அடிபட்டு 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து பேட்டை ெரயில் நிலைய அலுவலர் அறிவழகன் ெரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்தில் போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தில் பலியானவர் பேட்டை ரகுமான் பேட்டையை சேர்ந்த மியான் மைதீன் மகன் தமீம் அன்சாரி (வயது 40) என்பதும் இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. இவருக்கு ஜன்னத் (35) என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளது தெரிய வந்தது. உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நரசிங்கநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி முத்துக்குமார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.