லாரி டிரைவர் கொலை: அண்ணன், தம்பி ஆத்தூர் கோர்ட்டில் சரண்
ஆத்தூர் அருகே நடந்த லாரி டிரைவரை கொன்ற வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட அண்ணன், தம்பி ஆத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். மேலும் அவர்களது தந்தையை போலீசார் கைது செய்தனர்.
ஆத்தூர்:
லாரி டிரைவர் கொலை
ஆத்தூர் அருகே உள்ள கடம்பூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சீனிவாசன், லாரி டிரைவர். இவர் கடந்த 24-ந் தேதி மோட்டார் சைக்கிளில் ஆத்தூருக்கு சென்ற போது பைத்தூர்புதூர் என்ற இடத்தில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் லாரி டிரைவர் சீனிவாசனின் உறவினர்கள் ரவிக்குமார், அவரது மகன்கள் மணிகண்டன் மற்றும் விஜய் ஆகிய 3 பேரும் நிலத்தகராறில் அவரை கொன்றது தெரியவந்தது. இதுகுறித்து ஆத்தூர் ரூரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
கோர்ட்டில் சரண்
இந்த நிலையில் மணிகண்டன், விஜய் ஆகிய இருவரும் நேற்று ஆத்தூர் குற்றவியல் நடுவர் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு முனுசாமி முன்னிலையில் சரணடைந்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும், 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். தொடர்ந்து இருவரும் ஆத்தூர் சிறையில் அடைக்கப்பட்டனர்
இதனிடையே சரணடைந்த மணிகண்டன், விஜய் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஆத்தூர் ரூரல் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
தந்தை கைது
மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக சரணடைந்த 2 பேரின் தந்தை ரவிக்குமாரை போலீசார் தொடர்ந்து வலைவீசி தேடி வந்தனர். இதனிடையே ஆத்தூர் அருகே உள்ள கடம்பூருக்கு மோட்டார் சைக்கிளில் பைத்தூர் வழியாக நேற்று இரவு சென்று கொண்டிருந்த ரவிக்குமாரை, சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் ேபாலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
ஆத்தூர் அருகே கொலை செய்யப்பட்ட லாரி டிரைவர் சீனிவாசன் கடம்பூர் பகுதியை சேர்ந்தவர். இந்த பகுதி கெங்கவல்லி போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியாகும். நிலத்தகராறு காரணமாக சீனிவாசன் தரப்பினரும், ரவிக்குமார் தரப்பினரும் கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததாக தெரிகிறது.
அப்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவலிங்கம், 2 தரப்பினரிடமும் சரியாக விசாரிக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கொலை சம்பவம் நடக்கும் அளவுக்கு சென்றதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து கடம்பூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவலிங்கத்தை நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு பணி இடமாற்றம் செய்து மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் உத்தரவிட்டார்.