லாரி உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை
தோகைமலை அருகே குடும்ப பிரச்சினையில் லாரி உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
குடும்பத்தில் கருத்து வேறுபாடு
கரூர் மாவட்டம், போத்துராவுத்தம்பட்டி ஊராட்சி, கல்லுப்பட்டியை சேர்ந்தவர் கோபால் (வயது 40). இவர் சொந்தமாக லாரி வைத்தும், அதன் டிரைவராகவும் இருந்து வந்தார். இவருக்கு திருமணாகி கிருஷ்ணவேணி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்தநிலையில் கோபால்-கிருஷ்ணவேணி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
தற்போது கிருஷ்ணவேணி தனது குழந்தைகளுடன் தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபாலும், கிருஷ்ணவேணியும் சேர்ந்து வாழ இரு குடும்பத்தாரும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இதில் உடன்பாடு ஏற்படாமல் கிருஷ்ணவேணி விவகாரத்து கேட்டு குடும்ப நல கோர்டில் வழக்கு தொடர்ந்தார்.
தற்கொலை
இதனால் மனமுடைந்து காணப்பட்ட கோபால் இதுகுறித்து பலரிடம் போன் செய்து புலம்பிய வண்ணம் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று காலை தோகைமலை அருகே உள்ள காக்காயம்பட்டி 4 ரோடு பகுதியில் உள்ள வீரியபெருமாள் என்பவரின் தோட்டத்தில் விஷம் குடித்த நிலையில் கோபால் இறந்து கிடந்தார். இதைக்கண்ட கோபாலின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ேதாகைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல்பேரில் தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் கோபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கோபாலின் உடல் அருகே கிடந்த மருந்து பாட்டிலையும் போலீசார் கைப்பற்றினர். இந்த தற்கொலை குறித்து கோபாலின் தாய் முருகாயி கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.