தகராறில் தொழிலாளியின் கண் பார்வை இழப்பு: ஈரோட்டில் உறவினர்கள் திடீர் சாலை மறியல்


தகராறில் தொழிலாளியின் கண் பார்வை இழப்பு: ஈரோட்டில் உறவினர்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 21 Jun 2023 2:07 AM IST (Updated: 21 Jun 2023 7:50 AM IST)
t-max-icont-min-icon

தகராறில் தொழிலாளியின் கண் பார்வை இழப்பு: ஈரோட்டில் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனா்

ஈரோடு

தகராறில் தொழிலாளியின் கண் பார்வை இழந்ததால், உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோட்டில் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

ஈரோடு சென்னிமலைரோடு விவேகானந்தர் வீதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 38). சுமைதூக்கும் தொழிலாளி. இவர் தனது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்களுடன் சேர்ந்து புகார் மனு கொடுப்பதற்காக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று காலை வந்தார். அப்போது அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு காந்திஜிரோட்டில் திடீரென அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இருபுறங்களிலும் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாரிடம் சந்தோஷ் கூறியதாவது:-

நான் எனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 7-ந் தேதி ஈரோடு திண்டலில் உள்ள ஒரு மதுபான பாரில் மது குடிக்க சென்றேன். அங்கு சாப்பிட்டதற்கான தொகையை கிரெடிட் கார்டு மூலமாக நான் செலுத்தினேன். அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டபோது எனது செல்போனை காணவில்லை. இதுதொடர்பாக அங்கு வேலை பார்க்கும் ஊழியரிடம் கேட்டேன். தனக்கு 'டிப்ஸ்' கொடுத்தால் செல்போனை தேடி கண்டுபிடித்து கொடுப்பதாக கூறினார். மேலும், 'டிப்ஸ்' கொடுக்க முடியாதவர்கள் எதற்காக மது குடிக்க வரவேண்டும் என்று தரக்குறைவாக பேசினார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மதுபான ஊழியர்கள் எங்களை தாக்கினர். அப்போது ஒருவர் காலி பீர் பாட்டிலை எடுத்து எனது தலையில் தாக்கியபோது வலது கண்ணிலும் காயம் ஏற்பட்டது. இதனால் எனது கண் பார்வையும் பறிபோனது.

பார்வை இழப்பு

இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் ஒருதலைபட்சமாக செயல்படுகின்றனர். இதுவரை என்னை தாக்கியவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பார்வை இழந்ததால் எனது வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்து வருகிறேன்.என்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்றால், எனது 2 குழந்தைகளையும் கருணை கொலை செய்துவிட்டு நானும், எனது மனைவியும் தற்கொலை செய்து கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதற்கு புகார் மனு கொடுங்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் தங்களது சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போக்குவரத்து எப்போதும் பரபரப்பாக காணப்படும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story