ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வடமாநில இளம்பெண் தற்கொலை


ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த   வடமாநில இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 28 Nov 2022 12:15 AM IST (Updated: 28 Nov 2022 12:27 PM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வடமாநில இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வடமாநில இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆன்லைன் சூதாட்டம்

ஆன்லைன் சூதாட்டம் காரணமாக தமிழகத்தில் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பலர் பணத்தை இழந்துள்ளனர். இதனால் தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆனால் அரசு என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக தற்கொலை சம்பவங்களும், பணம் இழப்பு சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அவ்வாறு ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் தென்காசி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

வடமாநில தம்பதி

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அஜய்குமார் மாண்டல் (வயது 25). இவரது மனைவி ஸ்ரீதனா மாஞ்சி (22). இவர்களுக்கு திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.

கணவன்-மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஊரில் இருந்து பிழைப்பு தேடி தமிழகத்திற்கு வந்தனர். அவர்கள் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்துள்ள கரிவலம்வந்தநல்லூர் அருகே வேலாயுதபுரத்தில் வாடகை வீட்டில் குடியேறினார்கள்.

பிணமாக தொங்கினார்

அஜய்குமார் மாண்டல் வேலாயுதபுரம் அருகே உள்ள பெருமாள்பட்டி பகுதியில் தனியார் நூற்பாலையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். வழக்கம் போல் காலையில் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.

அதன்படி நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு, மாலையில் வீடு திரும்பினார். அப்போது அவர் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய செய்தது. வீட்டில் அவரது மனைவி ஸ்ரீதனா மாஞ்சி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார். இதை பார்த்து அவர் கதறி அழுதார்.

போலீசார் விரைந்தனர்

இதுகுறித்து உடனடியாக கரிவலம்வந்தநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஸ்ரீதனா மாஞ்சி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.

ரூ.70 ஆயிரம்

அப்போது, திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது, அஜய்குமார் மாண்டல் கூலிவேலைக்கு சென்றதும் வீட்டில் தனியாக இருந்த ஸ்ரீதனா மாஞ்சி தனது செல்போனில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர் ரூ.70 ஆயிரம் வரை இழந்துள்ளார். இதனால் வேதனை அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும் அவரது செல்போனை போலீசார் ஆய்வு செய்தபோது ஆன்லைனில் ரம்மி விளையாடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பரபரப்பு

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வடமாநில இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story