லாட்டரி சீட்டு விற்றவர் கைது
திண்டுக்கல்லில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் பகுதியில் ஆன்லைன் மூலம் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக வடக்கு போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து நகர் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள், கடைகளில் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு கடையில் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்கப்படுவதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் கடையில் லாட்டரி சீட்டுகளை விற்றது பாலகிருஷ்ணாபுரம் சிறுமணிநகரை சேர்ந்த சிக்கந்தர்பாட்ஷா (வயது 43), குமரன் திருநகரை சேர்ந்த மோகன் குமார் (33) ஆகியோர் என்பதும், போலீசார் வருவது குறித்து தகவலறிந்ததும் மோகன்குமார் தப்பியோடி தலைமறைவானதும் தெரியவந்தது. பின்னர் கடையில் இருந்த சிக்கந்தர் பாட்ஷாவை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 68 லாட்டரி சீட்டுகள், ரூ.7 ஆயிரத்து 640 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவான மோகனகுமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.