40 பஸ்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்கள் பறிமுதல்


40 பஸ்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 19 April 2023 12:15 AM IST (Updated: 19 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் பகுதியில் 40 பஸ்களில் இருந்து அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

விழுப்புரம்

விழுப்புரம்

அதிகாரிகள் சோதனை

விழுப்புரம் பகுதியில் இயக்கப்படும் தனியார் மற்றும் அரசு பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை விதியை மீறி பொருத்தி, பொதுமக்களை மிரள வைக்கும் வகையில் ஒலி எழுப்பி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று விழுப்புரம் வட்டார போக்குவரத்துத்துறை அலுவலர்களுக்கு பொதுமக்கள் புகார்கள் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில் துணை போக்குவரத்து ஆணையர் ரஜினிகாந்த் உத்தரவின்பேரில் விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், கோவிந்தராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

40 பஸ்களில் ஏர்ஹாரன்கள் பறிமுதல்

அப்போது தனியார் மற்றும் அரசு பஸ்களில் போக்குவரத்து விதிகளை மீறி பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி 15 அரசு பஸ்கள் மற்றும் 25 தனியார் பஸ்கள் என 40 பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன்களை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.

மேலும் தனியார் பஸ்கள் அதிவேகமாக செல்லக்கூடாது என்று அதன் டிரைவர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதையும் மீறி அதிவேகமாக சென்றால் பஸ் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும். இதுபோன்ற அதிரடி நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும். எனவே அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்களை பொருத்தக்கூடாது என்றும் மீறி பொருத்தினால் அபராதம் விதிக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.


Next Story