கடல் கடந்து மலர்ந்த காதல்: வெளிநாட்டு பெண்ணை கரம் பிடித்த கடலூர் வாலிபர்


கடல் கடந்து மலர்ந்த காதல்: வெளிநாட்டு பெண்ணை கரம் பிடித்த கடலூர் வாலிபர்
x

கடல் கடந்து மலர்ந்த காதலால் வெளிநாட்டு பெண்ணை கடலூர் வாலிபர் கரம் பிடித்துள்ளார்.

கடலூர்,

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் பாலமுருகன்(வயது 30). இவர் நார்வே நாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், அதே பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் நார்வே போர்கன் பகுதியை சேர்ந்த சிவானந்தினி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே காதலாக மலர்ந்தது.

இதையடுத்து இருவரும் ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இலங்கை தமிழரான சிவானந்தினியின் பெற்றோர் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு நார்வே நாட்டிற்கு குடிபெயர்ந்தனர்.

தமிழ் கலாசாரப்படி...

பின்னர் காதலர்கள் இருவரும் தங்கள் காதல் விவகாரம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தனர். அதற்கு இருவரது பெற்றோரும் பச்சைக்கொடி காட்டியதால், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

அப்போது சிவானந்தினி தமிழ் கலாசாரப்படி திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார். காதலியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக பாலமுருகன், கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவானந்தினி மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு வந்தார்.

திருமணம்

இதையடுத்து பாலமுருகன்-சிவானந்தினி ஆகியோரது திருமணம் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.

இந்து கலாசாரப்படி நடந்த இந்த திருமணத்தில் மணமகன் குடும்பத்தினர் மற்றும் நார்வே நாட்டில் இருந்து வந்திருந்த மணமகள் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

இதில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


Next Story