பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல்ஜோடி தற்கொலை


பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல்ஜோடி தற்கொலை
x

அறந்தாங்கி அருகே பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல்ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

புதுக்கோட்டை

காதல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே காடை இடையாத்தூரை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் அருண் (வயது 23). அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகள் முகேஸ்வரி (15). இவர் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அருணும், முகேஸ்வரியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதற்கு இருவீட்டாரின் பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக முகேஸ்வரி பள்ளிக்கு செல்லாமல் தையல் வேலைக்கு சென்று வந்துள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

கடந்த 1-ந் தேதி காதலன் அருணுடைய அக்காள் திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்திற்கு முகேஸ்வரி சென்று வந்துள்ளார். இதனையறிந்த அவரது பெற்றோர் தங்களது மகளை கண்டித்து உள்ளனர். நேற்று முன்தினம் இரவு முகேஸ்வரி திடீரென மாயமானார். இதையடுத்து, அவரது பெற்றோர் தங்களது மகளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர்.

அப்போது வீட்டிலிருந்து ½ கிலோமீட்டர் தூரம் உள்ள பிடாரியம்மன் கோவில் அருகே உள்ள ஆலமரத்தில் ஒரே கிளையில் கருப்பு கலர் வேட்டி மற்றும் துண்டை ஒன்றாக முடிச்சு போட்டு அருண்-முகேஸ்வரி ஆகியோர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நாகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல்ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story