காதல் ஜோடி தஞ்சம்
மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்துள்ளனர்
மயிலாடுதுறை ரெயில்நிலையம் பகுதியில் செல்போன் சர்வீஸ் மையம் நடத்தி வருபவர் முத்துகிருஷ்ணன் மகன் தீபன்(வயது 25). குத்தாலம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகள் ஹரிணி(20). பி.காம் பட்டதாரி. இருவரும் கடந்த 2½ ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு ஹரிணி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 24- ந் தேதி இருவரும் கடலூரில் பதிவு திருமணம் செய்துகொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஹரிணியின் பெற்றோர் குத்தாலம் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் குத்தாலம் போலீசார் தீபன் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனையறிந்த தீபன், ஹரிணி ஜோடி தமது நண்பர்கள், வக்கீலுடன் பாதுகாப்பு கேட்டு மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விடுமுறையில் இருப்பதால், தனிப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சதீஷ் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் இருவரும் மேஜர் என்பதும், அவர்கள் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. மேலும் ஆவணங்களை சரிபார்த்த போலீசார் ஹரிணியின் விருப்பப்படி அவரது கணவர் தீபனுடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.