காதல் கணவரை கூலிப்படை மூலம்வெட்டி கொல்ல முயன்ற மனைவி


தினத்தந்தி 14 Jun 2023 12:15 AM IST (Updated: 14 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த காதல் கணவரை கூலிப்படையை ஏவி வெட்டி கொல்ல முயன்ற மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த காதல் கணவரை கூலிப்படையை ஏவி வெட்டி கொல்ல முயன்ற மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விளாத்திகுளம் அருகே நடந்த இந்த பரபரப்பான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

காதல் திருமணம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அழகு சுந்தரபாண்டி (வயது 32), விவசாயி. இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து விவசாய பணிகள் மேற்கொண்டு வருகிறார்.

இவரும், வல்லநாடு பகுதியைச் சேர்ந்த புனித ஆனி எப்சிபா (29) என்பவரும் காதலித்து கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் குடும்பமாக சின்னவநாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

பின்தொடர்ந்த மர்மநபர்கள்

கடந்த 8-ந்தேதி இரவு 7 மணியளவில் அழகு சுந்தரபாண்டி வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். சங்கலிங்கபுரம் விலக்கில் சென்றபோது, அவரது கிராமத்தைச் சேர்ந்த மாரிராஜ் (31) என்பவர் அவருடன் பேசிக் ெகாண்டே வந்தார்.

திடீரென மாரிராஜ் நின்று விட, அழகு சுந்தரபாண்டி தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். சல்லிசெட்டிபட்டி கிராமம் அருகில் சென்றபோது, அவரை பின்தொடர்ந்து 2 மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் முகப்பு விளக்கை போடாமல் வந்தனர். அவர்கள் திடீரென்று தாங்கள் வைத்திருந்த அரிவாளை எடுத்து அழகு சுந்தரபாண்டி மீது வீசினர். ஆனால் குறி தவறி அரிவாள் கீழே விழுந்தது.

அரிவாள் வெட்டு

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அழகு சுந்தரபாண்டி மர்மநபர்கள் தன்னை வெட்டிக் கொல்ல முயன்றதை அறிந்து வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றார். ஆனாலும் மர்மநபர்கள் கீழே விழுந்த அரிவாளை எடுத்துக்கொண்டு அவரை துரத்திச் சென்று வெட்டினர். இதில் அழகு சுந்தரபாண்டிக்கு மார்பு பகுதியில் லேசான வெட்டுக்காயம் ஏற்பட்டது.

பின்னர் சுதாரித்துக்ெகாண்ட அழகு சுந்தரபாண்டி மோட்டார் சைக்கிளை திருப்பி, அருகே உள்ள பெட்டிக்கடைக்கு ஓட்டி சென்றார். அதற்குள் பொதுமக்கள் சிலரும் அங்கு கூடினர். இதனால் மர்மநபர்கள் தப்பித்தால் போதும் என்று கருதி அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று விட்டனர்.

திடுக்கிடும் தகவல்

இதுகுறித்து உடனடியாக சங்கரலிங்கபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அரிவாள் வெட்டில் காயம் அடைந்த அழகு சுந்தரபாண்டி சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தொடர்ந்து போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அதில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், அழகு சுந்தரபாண்டியை அவரது மனைவி புனித ஆனி எப்சிபா கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்ற திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதன் விவரம் வருமாறு:-

கள்ளத்தொடர்பு

சம்பவத்தன்று அழகு சுந்தரபாண்டியுடன் பேசிக்கொண்டே வந்து திடீரென மாயமான மாரிராஜூக்கும், அழகு சுந்தரபாண்டியின் மனைவி புனித ஆனி எப்சிபாவுக்கும் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. தனது கள்ளக்காதலுக்கு கணவர் இடையூறாக இருந்ததால், அவரை தீர்த்துக்கட்ட புனித ஆனி எப்சிபா தனது கள்ளக்காதலன் மாரிராஜ் (31) மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (20) ஆகியோருடன் சேர்ந்து திட்டமிட்டு உள்ளார்.

அதன்படி, மதுரையை சேர்ந்த கூலிப்படையினருக்கு ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் பேசி, ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கொடுத்து உள்ளனர். இதையடுத்து கூலிப்படையை சேர்ந்த 2 பேர் அழகு சுந்தரபாண்டியை வெட்டிக் கொலை செய்ய முயன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

3 பேர் கைது

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, புனித ஆனி எப்சிபா, மாரிராஜ், சரவணன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் புனித ஆனி எப்சிபா நெல்லை கொக்கிரகுளம் பெண்கள் சிறையிலும், மற்ற 2 பேரும் கோவில்பட்டி கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கூலிப்படையைச் சேர்ந்த 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த காதல் கணவரை கூலிப்படையை ஏவி கொல்ல முயன்ற மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story