காதல் கணவரை கண்டுபிடித்து சேர்த்து வைக்க வேண்டும்


காதல் கணவரை கண்டுபிடித்து சேர்த்து வைக்க வேண்டும்
x

காதல் கணவரை கண்டுபிடித்து சேர்த்து வைக்க வேண்டும் என்று திருவலத்தை சேர்ந்த கர்ப்பிணி குறைதீர்வு கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனிடம் புகார் மனு அளித்தார்.

வேலூர்

குறைதீர்வு கூட்டம்

வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சேகர், உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) பிரசன்னகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் திருவலத்தை சேர்ந்த பிரீத்தி (வயது 19) என்பவர் அளித்த புகார் மனுவில், நானும் அதே பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவரும் 4 ஆண்டுகளாக காதலித்தோம். எங்கள் காதலுக்கு தட்சிணாமூர்த்தியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் எதிர்ப்பையும் மீறி இருவரும் கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டோம். பின்னர் தட்சிணாமூர்த்தி வேலை செய்து வந்த திருப்பூருக்கு சென்று குடித்தனம் நடத்தினோம்.

காதல் கணவர் மாயம்

இதற்கிடையே நான் கர்ப்பமானேன். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு வந்தோம். எனது வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்த நிலையில் தட்சிணாமூர்த்தி அவருடைய பெற்றோரை சமாதானம் செய்து என்னை வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி விட்டு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றால் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. தற்போது நான் 6 மாதம் கர்ப்பமாக உள்ளேன். எனது கணவர் எங்கே உள்ளார் என்று தெரியவில்லை. அவரை கண்டுபிடித்து என்னுடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு, இதுதொடர்பாக திருவலம் போலீசார் இருதரப்பினரையும் அழைத்து விசாரித்து உள்ளனர். வருகிற 13-ந் தேதிக்குள் போலீசார் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பார்கள். இல்லையென்றால் மீண்டும் என்னை வந்து சந்தித்து மனு அளிக்கவும் என்று கூறி அனுப்பி வைத்தார்.

கோர்ட்டில் தீர்வு காண வேண்டும்

குடியாத்தம் முன்னாள் எம்.எல்.ஏ. லதா அளித்த மனுவில், முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் உள்தேர்வில் (இன்டர்னல் தேர்வு) தோல்வியடைந்த மாணவனின் மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்து தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ் வழங்கி உள்ளனர். இதில் தொடர்புடைய பேராசிரியர்கள் உள்பட அனைவரின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதேபோன்று பணமோசடி, நிலஅபகரிப்பு, கொலை மிரட்டல், அடி-தடி உள்ளிட்ட பல்வேறு புகார் மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

அதனை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், ஏலச்சீட்டு மோசடி, நிலப்பிரச்சினை போன்றவற்றுக்கு கோர்ட்டில்தான் தீர்வு காண வேண்டும். இவற்றில் போலீசார் தலையிடக் கூடாது என்று கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. எனவே பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் கோர்ட்டில் வழக்கு தொடர வேண்டும் என்றார்.


Next Story