காதல் கணவர் தற்கொலை
காதல் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரம் தேவிநகரை சேர்ந்தவர் சங்கரலிங்கம் மகன் சுந்தரம் (வயது 28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மாலதி (24) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் நடந்தது. சுந்தரம் பட்டாசு கடையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட்டுறவு வங்கியில் கடன் வாங்குவது தொடர்பாக சுந்தரம், மாலதிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில் மாலதி வீட்டின் முன் அறையில் படுத்து தூங்கி உள்ளார். பின்னர் காலையில் அறையில் படுத்து தூங்கிய கணவரை எழுப்ப அறையின் கதவை தட்டிய போது கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மாலதி ஜன்னல் வழியாக அறையின் உள்ளே பார்த்த போது அங்கு சுந்தரம் தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாலதி அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று சுந்தரத்தை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், சுந்தரம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து மாலதி அளித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.