காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கணவருடன் தகராறில் காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
பணகுடி:
காதல் திருமணம் செய்த பெண், கணவருடன் ஏற்பட்ட தகராறில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காதல் திருமணம்
நெல்லை மாவட்டம் பணகுடி அழகியநம்பிபுரத்தை சேர்ந்தவர் மைக்கிள் மதன்சிங் (வயது 27).
இவர் 3 ஆண்டுகளுக்கு முன் பணகுடி உலக முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த சினேகாவை (23) காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
நேற்று மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் மைக்கிள் மதன்சிங், சினேகாவின் செல்போனை பிடுங்கி தரையில் எறிந்து உடைத்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் சினேகா வீட்டில் உள்ள அறைக்கு சென்று மின் விசிறியில் சேலையில் தூக்கு போட்டுள்ளார். இதை பார்த்த மைக்கிள் மதன்சிங் பக்கத்தில் உள்ளவர்களுடன் சேர்ந்து சினேகாவை கீழே இறக்கி பணகுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், அவர் இறந்து விட்டதாக கூறினார்.
இதுபற்றி பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சினேகா உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம், வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.