காதல் திருமணம் செய்த வாலிபர் வெட்டிக்கொலை
நெல்லை அருகே, காதல் திருமணம் செய்த வாலிபர் சரமாரி வெட்டிக்கொைல செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேரன்மாதேவி:
நெல்லை அருகே, காதல் திருமணம் செய்த வாலிபர் சரமாரி வெட்டிக்கொைல செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
வாலிபர்
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ஆட்டுத்தட்டை தெருவை சேர்ந்த முத்தையா என்பவரது மகன் முருகன் (வயது 26). இவர் நாகர்கோவில் வெள்ளமடம் பகுதியில் கையுறை தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். முருகன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பத்தமடை சிவானந்தா காலனியை சேர்ந்த முத்துலட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு சுகிர்தா சிந்து (3) என்ற மகளும், முகுந்த் கிஷோர் (1) என்ற மகனும் உள்ளனர். தற்போது முத்துலட்சுமி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
முன் விரோதம்
முருகன் கடந்த ஒன்றரை ஆண்டாக பத்தமடை சிவானந்தா காலனி காந்திநகர் 2-வது தெருவில் குடும்பத்துடன் குடியிருந்து வந்தார்.
முருகனுக்கும், அவரது உறவினர் பத்தமடை சிவானந்தா காலனி காந்தி நகர் 3-வது தெருவைச் சேர்ந்த முத்தையா மகன் மணிராஜ் (38) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
வெட்டிக்கொலை
இந்த நிலையில் முருகன் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக கேக் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் கணவன், மனைவி இருவரும் வீட்டில் பேசிக்கொண்டு இருந்தனர்.
இரவு 11.30 மணி அளவில் முருகன் வீட்டுக்கு மணிராஜின் மகன் வந்து அழைத்தார். பின்னர் இருவரும் சிறிது தூரம் சென்றனர். அப்போது அங்கு வந்த மணிராஜுக்கும், முருகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த மணிராஜ் மற்றும் அவரது உறவினர் முத்துராஜ் ஆகியோர் சேர்ந்து முருகனை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த முருகன் சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
3 பேர் கைது
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பத்தமடை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மணிராஜ் மற்றும் அவரது உறவினர் முத்துராஜ் உள்பட 3 பேரை பத்தமடை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோகம்
நேற்று காலை சம்பவ இடத்தை சேரன்மாதேவி துைண போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், சேரன்மாதேவி இன்ஸ்பெக்டர் சுபாஷ் ராஜன் மற்றும் போலீசார் பார்வையிட்டனர்.
புத்தாண்டை கொண்டாட இருந்த நிலையில் முருகன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அவரது குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.