சித்தன்னவாசலுக்கு வரும் காதலர்களுக்கு தடை விதிக்க வேண்டும்
காதலர் தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) சித்தன்னவாசலுக்கு வரும் காதலர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
காதலர் தினம்
உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ந்தேதி (இன்று) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசல் சுற்றுலா தலத்திற்கு காதலர் தினத்தன்று காதலர்களில் சிலர், சித்தன்னவாசலில் முகாமிட்டு ஆபத்தான பகுதிகளுக்கு செல்வதும், மலை உச்சியில் ஆர்வ மிகுதியால் பல்வேறு கோணங்களில் ஆபத்தான பகுதிகளில் செல்பி எடுப்பதும், சிலர் அநாகரிக செயல்களில் ஈடுபடுவதும் வாடிக்கையாகி விட்டது. எனவே காதலர் தினத்தன்று சித்தன்னவாசலில் காதலர்களை அனுமதிக்க கூடாது.
கோரிக்கை
அதே போன்று சிலர் சித்தன்னவாசல் பூங்காவில் செடி, கொடிகள் அடர்ந்த பகுதிகளில் அமர்ந்து அநாகரிக செயல்களில் ஈடுபடுவது, மற்ற சுற்றுலா பயணிகளை முகம் சுளிக்க வைக்கின்றது. எனவே அது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் சித்தன்னவாசல் நுழைவுவாயிலில் போலீசாரை நிறுத்தவும், பூங்காக்களில் சமணர் படுக்கை, படகு குளம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வரம்பு மீறிய செயல்கள்...
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், சித்தன்னவாசலில் காதலர்கள் என்ற பெயரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வகுப்பினை புறக்கணித்து விட்டு பெற்றோரை ஏமாற்றி சுற்றித்திரியும் அவலம் தினமும் அரங்கேறுகிறது. தொல்லியல் பொக்கிஷமான சித்தன்னவாசலுக்கு வருகின்ற காதல் ஜோடிகள் வரம்பு மீறிய செயல்களில் ஈடுபடுகின்றனர். சமணர் சிற்பம் மீது ஏறி புகைப்படம் எடுப்பது, கல்வெட்டுகளில் தங்கள் பெயரை கிறுக்கி வைப்பது, பூங்காவின் புதர்களை நாடுவது, இன்னும் சிலர் தாங்கள் அழைத்து வரும் பெண்களை மது அருந்த செய்வது போன்ற பல செயல்களில் ஈடுபடுகின்றனர்.
சில சமூக விரோதிகள் பூங்காவில் குடித்துவிட்டு சேதப்படுத்துகின்றனர். இதனால் பெரும் பின் விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் பள்ளி மாணவர்கள் சீருடையுடனும், கல்லூரி மாணவர்களும் ஜோடியாக தகாத செயல்களை செய்யும் இடமாக மாறி வருகிறது. வீட்டில் பெற்றோரிடம் பள்ளி, கல்லூரி செல்வதாக ஏமாற்றிவிட்டு பொழுதை கழிக்கும் இடமாக மாறி வருவது கவலை அளிக்கிறது என்றனர்.