வாகன ஓட்டிகளுக்கு குறைந்த விலையில் ஹெல்மெட்
கூடலூரில் விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு குறைந்த விலையில் ஹெல்மெட் வழங்கப்பட்டது.
கூடலூர்,
கூடலூர் போலீசார் மற்றும் போக்குவரத்து காவல்துறை, தனியார் அமைப்பு சார்பில், ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள காந்தி சிலை முன்பு நடைபெற்றது. போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமை தாங்கி பேசும்போது, வாகன விபத்துகள் மற்றும் உயிர் சேதங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் சாலை விதிமீறல்களுக்கான அபராத தொகையை அதிகரித்து உள்ளது. அதிக அபராத தொகை செலுத்துவதில் இருந்து விலக்கு பெற வாகன ஓட்டிகள் சாலை விதிகளை முறையாக கடைபிடிப்பதோடு, தங்கள் உயிரையும் உடன் பயணிப்பவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்றார்.
தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை போலீசார் கண்காணித்து பிடித்தனர். பின்னர் அவர்களுக்கு தனியார் அமைப்பு மூலம் குறைந்த விலையில் ஹெல்மெட்டுகளை போலீசார் வழங்கினர். இதனால் அபராதம் செலுத்துவதை தவிர்க்கும் பொருட்டு, ஐ.எஸ்.ஓ. தரம் கொண்ட ஹெல்மெட்டுகளை குறைந்த விலைக்கு வாகன ஓட்டிகள் வாங்கிச் சென்றனர். இதில் நகராட்சி தலைவர் பரிமளா, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சுப்பிரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் செய்திருந்தார்.