பலத்த சூறைக்காற்றால் வரத்து குறைவு:தூத்துக்குடியில் வாழை இலை விலை கடும் உயர்வு


பலத்த சூறைக்காற்றால் வரத்து குறைவு:தூத்துக்குடியில் வாழை இலை விலை கடும் உயர்வு
x
தினத்தந்தி 29 July 2023 12:15 AM IST (Updated: 29 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பலத்த சூறைக்காற்றால் வரத்து குறைவால் தூத்துக்குடியில் வாழை இலை விலை கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் பலத்த சூறைக்காற்றால் மார்க்கெட்டுக்கு வாழை இலை வரத்து குறைந்துள்ளது. அதன் காரணமாக விலை கடுமையாக உயர்ந்து உள்ளது.

பலத்த சூறைக்காற்று

தூத்துக்குடி மாவட்டத்தில் வாழை சாகுபடி முக்கிய இடத்தை பிடித்து உள்ளது. தாமிரபரணி பாசனத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பில் வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வாழை இலை, வாழைத்தார்கள் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன.

இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால் போதிய தண்ணீர் இன்றி வாழை பயிரை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர். தண்ணீர் பற்றாக்குறை காரணமாக வாழைகள் கருகும் நிலை உருவாகி உள்ளது. அதே நேரத்தில் கடந்த சில வாரங்களாக பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் வாழை இலைகள் சேதம் அடைந்துள்ளன.

விலை உயர்வு

ஆகையால் வாழை இலை போதுமான அளவுக்கு கிடைக்கவில்லை. குறைந்த அளவு வாழை இலைக்கட்டுகள் மட்டுமே தூத்துக்குடி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் வாழை இலை விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. வழக்கமாக ரூ.600 வரை விற்பனையாகக் கூடிய சிறிய வாழை இலைக்கட்டுகள் விலை உயர்ந்து தற்போது ரூ.1200 முதல் ரூ.1500 வரை விற்பனையாகிறது.

இதேபோன்று பெரிய இலை கட்டுகள் ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.3 ஆயிரத்து 800 வரை விற்பனை செய்யப்படுகிறது. வாழை இலை தேவை அதிகரித்து இருப்பதால், ஈரோடு, பெருந்துறை வத்தலகுண்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வாழை இலை கட்டுகள் தூத்துக்குடிக்கு வரத் தொடங்கி உள்ளன.


Next Story