கைவினை கலைஞர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் உதவி
தேசிய சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் கைவினை கலைஞர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்கப்படுகிறது என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
தேசிய சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் கைவினை கலைஞர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்கப்படுகிறது என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
மரபு வழி கடன் திட்டம்
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் மரபு வழி கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு விரசாத் என்ற புதிய மரபு வழி கடன் திட்டத்தினை தேசிய சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டம் மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் அவர்களின் தொழிலுக்கான உபகரணங்கள், எந்திரங்கள் ஆகியவற்றை வாங்க உதவும் நோக்கில் கடன் வழங்கப்படுகிறது.
பெண்களுக்கு 4 சதவீத வட்டி
இந்த திட்டத்தில் கடன் உதவி பெற ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.98 ஆயிரம், நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். கடனாக ரூ.10 லட்சம் வரை 5 ஆண்டு தவணை முறையில் ஆண்களுக்கு 5 சதவீத வட்டி விகிதத்திலும், பெண்களுக்கு 4 சதவீத வட்டி விகிதத்திலும் வழங்கப்படும்.
கடன் தொகையில் தேசிய சிறுபான்மையினர் நிதி மற்றும் வளர்ச்சி கழகத்தின் பங்கு 90 சதவீதம், மாநில சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் பங்கு 5 சதவீதமும் மற்றும் பயனாளியின் பங்கு 5 சதவீதம் ஆகும்.
திட்ட அறிக்கை அவசியம்
விண்ணப்ப படிவங்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் புகைப்படம், சாதிச்சான்று, வருமானம் மற்றும் பிறப்பிடச்சான்று அசலாக இருக்க வேண்டும்.
மேலும் குடும்பஅட்டை, ஆதார் அட்டை, ரூ.50 ஆயிரத்திற்குமேல் கடன் உதவி கோருபவராயின் வங்கி கோரும் அடமானத்திற்குரிய ஆவணங்கள், ரூ.1 லட்சத்திற்கு மேற்பட்ட கடன் உதவிகளுக்கு திட்ட அறிக்கை அவசியம் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் அலுவலகம், திருவாரூர் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த கைத்தறி மற்றும் கைவினை கலைஞர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து தங்களது பொருளாதார நிலையை மேம்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.