கும்பகோணத்தில் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்த தக்காளி
கும்பகோணத்தில் பல நாட்களாக உச்சத்தில் இருந்த தக்காளி விலை, வரத்து அதிகரிப்பால் குறைய தொடங்கி விட்டது. 1 கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்பனையானது.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் பல நாட்களாக உச்சத்தில் இருந்த தக்காளி விலை, வரத்து அதிகரிப்பால் குறைய தொடங்கி விட்டது. 1 கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்பனையானது.
தக்காளி விலை உயர்வு
தக்காளி இல்லாத உணவு பொருட்களே தயாரிக்க முடியாது. ரசம் முதல் பிரியாணி, சட்னி வரை அனைத்து சைவம் மற்றும் அசைவ உணவுகளிலும் தக்காளி இடம் பெரும். உணவுகளின் சுவை அதிகரிப்பதில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. அதே போல் தக்காளி சார்ந்த அழகு சாதன பொருட்களும் தயாரிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தக்காளி விலை அதிகரித்து காணப்பட்டது.
இதனால் உணவுகளில் தக்காளியை சேர்க்க வேண்டுமா? என்ற எண்ணத்தில் இல்லத்தரசிகள் இருந்தனர். கும்பகோணத்தில் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே சென்றது. கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் அதிகபட்சமாக 1 கிலோ தக்காளி ரூ.130 வரை விற்பனையானது. சில்லறை கடைகளில் மொத்த விற்பனை கடையை காட்டிலும் சற்று கூடுதல் விலைக்கு விற்பனையானது. தக்காளி விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
வரத்து அதிகரிப்பு
விலை உயர்ந்த காரணத்தால், கிலோ கணக்கில் வாங்கியவர்கள் ½ கிலோ, ¼ கிலோ அளவில் தக்காளியை வாங்கி சென்றனர்.
இந்த நிலையில் தற்போது வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்திருப்பதால் தக்காளி விலை படிபடியாக குறைந்து வருகிறது. கும்பகோணத்தில் நேற்று முன்தினம் கிலோ ரூ.80 முதல் ரூ.120 வரை விற்பனையான தக்காளி நேற்று ரூ.50-க்குவிற்பனையானது.
நீண்ட நாட்களாக விலை அதிகரித்து வந்த தக்காளி விலை தற்போது குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
தக்காளி விலை குறைவை தொடர்ந்து வெளிமாவட்டங்களில் இருந்து சரக்கு வேன், லோடு ஆட்டோக்களில் மொத்தமாக வாங்கி வந்து வீதி, வீதியாகவும், கிராமங்கள் தோறும் விற்பனை செய்து வருகின்றனர்.
இல்லத்தரசிகள் ஆர்வம்
1 கிலோ தக்காளி ரூ.100-க்கும் மேல் விற்பனையான நிலையில், சில சில்லறை விற்பனை கடைகளில் தக்காளியின் தரத்திற்கு ஏற்றவாறு 1½ கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனையாகிறது.
இதே போல் மற்ற காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளது. ரூ.80 முதல் ரூ.120 வரை விற்ற சின்ன வெங்காயம் ரூ.50-க்கும், ரூ.280-க்கு விற்ற இஞ்சி ரூ.210-க்கும், ரூ.50-க்கு விற்ற மிளகாய் ரூ.40-க்கும் விற்பனையாகிறது. காய்கறிகள் விலை தற்போது குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் ஆர்வத்துடன் வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.