கீழ் கோத்தகிரி அரசு பள்ளி புதுப்பொலிவானது


கீழ் கோத்தகிரி அரசு பள்ளி புதுப்பொலிவானது
x

கீழ் கோத்தகிரியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியை, தலைமை ஆசிரியை தனது சொந்த செலவில் புதுப்பொலிவாக மாற்றி உள்ளார். இதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

நீலகிரி

கோத்தகிரி,

கீழ் கோத்தகிரியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியை, தலைமை ஆசிரியை தனது சொந்த செலவில் புதுப்பொலிவாக மாற்றி உள்ளார். இதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

ஆங்கில வழிக்கல்வி

கோத்தகிரி தாலூகாவில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையில் படித்து வந்தனர். இதற்கு பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்ட தனியார் பள்ளி மற்றும் ஆங்கில வழிக்கல்வி மோகம் காரணமாகும். தொடர்ந்து கோத்தகிரி, தேனாடு, திம்பட்டி, ஒன்னதலை, குண்டாடா, கட்டபெட்டு ஆகிய அரசு பள்ளி ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் உதவியுடன் பள்ளி கட்டமைப்புகளை மேம்படுத்தினர்.

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை அறிமுகப்படுத்தியதோடு, பள்ளி மாணவர்களுக்கு தனியார் பள்ளி சீருடை போன்று வழங்கினர். மேலும் வீடு, வீடாக சென்று அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கும் பல்வேறு சலுகைகள் குறித்து விளக்கினர். இதன் மூலம் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இந்த பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் உள்ளது.

புதுப்பொலிவுடன் அரசு பள்ளி

கீழ் கோத்தகிரியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக சிவமணி பணியாற்றி வருகிறார். பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தலைமை ஆசிரியை, சக ஆசிரியர்கள் உதவியுடன் பள்ளி இடைநின்ற மாணவர்கள், வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் குறித்து கணக்கெடுத்தனர். அவர்களை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வீடுேதாறும் சென்று பெற்றோரிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தற்போது தலைமை ஆசிரியை தனது சொந்த செலவில் பள்ளி வகுப்புகளை சுத்தம் செய்து, சுவர்களுக்கு வர்ணம் தீட்டி பொலிவுப்படுத்தி உள்ளார். மேஜை, இருக்கைகளுக்கும் வர்ணம் தீட்டப்பட்டது. பள்ளி கட்டமைப்பை மேம்படுத்தி உள்ளதோடு, தரைதளம் பராமரிக்கப்பட்டு செடிகள் நடவு செய்யப்பட்டு இருக்கிறது. குழந்தைகள் விளையாட உபகரணங்கள் வாங்கி பொருத்தப்பட்டு உள்ளது. இதனால் அரசு பள்ளி புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. பள்ளி தலைமை ஆசிரியரின் இந்த முயற்சியை அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு தமிழக அரசு வழங்கிய எழுத்தறிவு விருதை தலைமை ஆசிரியை சிவமணி பெற்றது குறிப்பிடத்தக்கது.


Next Story