கடலில் நீர்மட்டம் தாழ்வு; திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து


கடலில் நீர்மட்டம் தாழ்வு; திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து
x
தினத்தந்தி 10 March 2023 12:15 AM IST (Updated: 10 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் திடீரென கடலில் நீர்மட்டம் தாழ்ந்ததால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் திடீரென கடலில் நீர்மட்டம் தாழ்ந்ததால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

திருவள்ளுவர் சிலை

புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது.

இவற்றை காண தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவர்கள் படகில் சென்று பார்வையிட தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. தினமும் காலை 8 மணிக்கு தொடங்கும் படகு போக்குவரத்து மாலை 4 மணி வரை இடைவேளை இன்றி தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது.

நீர்மட்டம் தாழ்வு

இந்த நிலையில் திருவள்ளுவர் சிலையில் கடந்த 9 மாதங்களாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. அந்த பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த 6-ந்தேதி முதல் திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வந்தது. சுற்றுலா பயணிகளும் உற்சாகத்துடன் பார்வையிட்டு வந்தனர்.

இந்த நிலையில் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து தொடங்கிய 3-வது நாளான நேற்று திடீரென கடல் நீர்மட்டம் தாழ்ந்தது. இதனால், விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு படகை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக நாள் முழுவதும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து திருவள்ளுவர் சிலையை காண ஆவலுடன் படகில் சென்ற சுற்றுலா பயணிகள் நீர்மட்டம் தாழ்வு காரணமாக போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

அதே வேளையில் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து எந்தவித தடங்கலும் இன்றி தொடர்ச்சியாக மாலை 4 மணி வரை நடைபெற்றது. கடல் நீர்மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து இயக்கப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story