கீழ்பவானி வாய்க்காலில் திட்டமிட்டு தண்ணீர் தட்டுப்பாடு; நாளை மறுநாள் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு


கீழ்பவானி வாய்க்காலில் திட்டமிட்டு தண்ணீர் தட்டுப்பாடு; நாளை மறுநாள் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு
x

கீழ்பவானி வாய்க்காலில் திட்டமிட்டு தண்ணீர் தட்டுப்பாடு; நாளை மறுநாள் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு

ஈரோடு

கீழ்பவானி வாய்க்காலில் திட்டமிட்டு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுத்துவதால் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

கான்கிரீட் தளம்

கீழ்பவானி வாய்க்காலில் பொதுப்பணித்துறை சார்பில் கான்கிரீட் தளம் அமைக்க திட்டமிட்டு ரூ.720 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டத்துக்கு ஒரு தரப்பு விவசாயிகள் ஆதரவும், மற்றொரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பும் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இந்த திட்டம் கைவிடப்பட்டு வாய்க்காலில் மராமத்து பணிகள் மட்டும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பொதுப்பணித்துறை கீழ்பவானி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் கண்ணனிடம், கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமையில் விவசாயிகள் நேற்று மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தினோம். எங்கள் கோரிக்கையை ஏற்று, அரசு அந்த திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. ஆனால், அரசு அதிகாரிகள் இந்த திட்டத்தை செயல்படுத்த தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர்.

செயற்கை தட்டுப்பாடு

அதற்காக தற்போது தண்ணீர் திருட்டு அதிகரித்துள்ளது என கூறி, அதை தடுக்காமலும், கீழ்பவானி வாய்க்காலில் குறைவாக தண்ணீர் திறந்துவிட்டு, கடைமடை வரை செல்லாததால், கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும் எனும் கோரிக்கையை மீண்டும் பரிந்துரைக்கின்றனர். கீழ்பவானி வாய்க்காலில் உள்ள ஒற்றை படை மதகு பாசனத்துக்கு மட்டும் தண்ணீர் திறக்க வேண்டும்.

ஆனால், இரட்டை படை மதகை சரியாக மூடாமலும், கிளை வாய்க்கால்களை வெட்டிவிட்டும் தண்ணீரை வெளியேற்ற செய்து, அதனை, 'கசிவு நீர்' எனக்கூறி, தண்ணீர் வீணாவதை தடுக்க கான்கிரீட் தளம், அமைக்க வேண்டும் என்கின்றனர். இவ்வாறு, செயற்கையான தண்ணீர் தட்டுப்பாடு, தண்ணீர் கடைமடை சென்றடையவில்லை என்ற மாயையை ஏற்படுத்தி அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். எனவே, இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.


Next Story