சுருளிப்பட்டி ஊராட்சி நிதியில் அதிகாரியின் உறவினர்களுக்கு ஆடம்பர செலவு


சுருளிப்பட்டி ஊராட்சி நிதியில் அதிகாரியின் உறவினர்களுக்கு ஆடம்பர செலவு
x

சுருளிப்பட்டி ஊராட்சி நிதியில் இருந்து அதிகாரியின் உறவினர்களுக்கு ஆடம்பர செலவு செய்தது குறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

தேனி

கம்பம் அருகே சுருளிப்பட்டி கிராம ஊராட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் 11 பேர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் அவர்கள் ஊராட்சி நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 3 கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். மேலும், அந்த மனுவுடன் ஊராட்சி வரவு, செலவு பட்டியலின் நகலையும் சமர்ப்பித்தனர். அந்த பட்டியலில் ஊராட்சி நிதியில் இருந்து அதிகாரிகளின் ஆய்வின் போது, அதிகாரிகளின் உறவினர்களுக்கு செலவு செய்தது உள்பட பல்வேறு பரபரப்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

ஊரக வளர்ச்சி முகமை அதிகாரி ஒருவரின் உறவினர்கள் கம்பத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியதற்காக ரூ.34 ஆயிரம் செலவு, கலெக்டர் அலுவலகத்தில் 3 வாகனங்களுக்கு தரச்சான்று வாங்கியது தொடர்பாக வாகன டிரைவர்களுக்கு செய்த செலவு, கலெக்டர் மற்றும் அதிகாரிகள் ஆய்வின் போது அவர்களுடன் வந்த பிற அதிகாரிகளின் டிரைவர்களுக்கு கொடுத்தது என விதவிதமான செலவுகள் அந்த பட்டியலில் இடம் பெற்று இருந்தன. இதைப் பார்த்து கலெக்டர் முரளிதரன் அதிர்ச்சி அடைந்தார். இந்த புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியனுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் இந்த புகார்கள் குறித்து கலெக்டர் முரளிதரனிடம் கேட்டபோது, "ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கொடுத்த புகாரில் ஊரக வளர்ச்சி முகமை துறை சார்ந்த அலுவலர்களையும் குறிப்பிட்டுள்ளதால் வருவாய்த்துறை அலுவலரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.


Next Story