அம்மா உணவகத்தில் எந்திரங்கள் பழுது
சீர்காழி அம்மா உணவகத்தில் எந்திரங்கள் பழுதடைந்துள்ளன. இதனை சீரமைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலைய வளாகத்தில் அம்மா உணவகம் கடந்த ஆட்சியில் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்தது. தற்போது இந்த அம்மா உணவகம் முழுமையாக பராமரிக்கப்படாமல் இங்குள்ள குடிநீர் குழாய்கள் சேதம் அடைந்தும், குடிநீரை சுத்திகரிக்கும் எந்திரம் பழுதடைந்தும் கடந்த ஓராண்டாக ஓரம் கட்டப்பட்டு காட்சி பொருளாக உள்ளது. இதன்காரணமாக உணவு சாப்பிடுபவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதில்லை. உணவின் சுவையும் குறைந்து வருவதாக உணவு உண்ணவரும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சீர்காழியை சேர்ந்த பாலு என்கிற பாலகிருஷ்ணன் கூறுகையில், சீர்காழி பகுதியை சேர்ந்த ஏழை-எளிய மக்கள், மாணவர்கள், கூலித் தொழிலாளர்கள் உள்பட அனைவருக்கும் இந்த அம்மா உணவகம் பயனுள்ளதாக இருக்கிறது. இட்லி ரூ.1-க்கும், சாம்பார் சாதம் ரூ.5-க்கும், தயிர் சாதம் ரூ.3-க்கும் கிடைப்பதால் பொதுமக்கள் இங்கு தினந் தோறும் வந்து சாப்பிட்டு செல்கின்றனர். இருந்தபோதும் கூடுதல் தரத்தோடு பொது மக்களுக்கு உணவு வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
சீர்காழியை சேர்ந்த குமார் என்பவர் கூறுகையில், சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் செயல்படும் அம்மா உணவகத்தில் வேலைக்கு செல்லும் கட்டுமான தொழிலாளர்கள், வாகன ஓட்டிகள் உள்பட பலர் வந்து குறைந்த விலைக்கு உணவு சாப்பிட்டு செல்கின்றனர். ஒரு சில குடும்பத்தினர் அம்மா உணவகத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். இந்த உணவகம் ஏழை மக்களுக்கு வரப் பிரசாதமாக இருந்து வருகிறது. ஆகவே, இந்த உணவகத்தை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பராமரிப்பு பணிகள்
மேலும் பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், இந்த அம்மா உணவகம் ஏழை- எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. தற்போது போதிய பராமரிப்பு இல்லாததால் உணவின் தரம் குறைந்து வருகிறது. மேலும் அம்மா உணவகத்தில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் உணவு உண்ணவரும் பொதுமக்கள் மனநிறைவோடு உணவு உண்ண முடியாத நிலை இருந்து வருகிறது. எனவே, அம்மா உணவகத்தில் பழுதடைந்த கருவிகளை பழுது நீக்கியும், பராமரிப்பு பணிகளை மேம்படுத்தியும் முன்புபோல செயல்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.