10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கியஇறைச்சி வியாபாரிக்கு 20 ஆண்டு சிறை ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கியஇறைச்சி வியாபாரிக்கு 20 ஆண்டு சிறை ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x

10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய இறைச்சி வியாபாரிக்கு 20 ஆண்டு சிறை தண்டைன விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது

ஈரோடு

10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய இறைச்சி வியாபாரிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

10-ம் வகுப்பு மாணவி

ஈரோடு ரெயில்வே காலனி பச்சப்பாளி மெயின்ரோடு விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் சப்தகிரி (வயது 41). திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர் மொடக்குறிச்சியை சேர்ந்த ஒருவருடன் சேர்ந்து ஆட்டு இறைச்சி வியாபாரம் செய்து வந்தார். அந்த பழக்கத்தில் அடிக்கடி அங்கு சென்று வந்தார். அப்போது 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.இந்தநிலையில் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந் தேதி மாணவி திடீரென்று மாயமானார். இதுதொடர்பாக அவரது பெற்றோர் மொடக்குறிச்சி போலீசில் புகார் தெரிவித்தனர். இந்தநிலையில் மாயமான மாணவி ஈரோடு -கரூர் ரோடு பரிசல்துறை பகுதியில் தனியாக அழுதுகொண்டு நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் விரைந்து சென்று அவரை மீட்டனர்.

கர்ப்பம்

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் சப்தகிரி, மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய விவரம் தெரியவந்தது. 5 மாதங்களுக்கு முன்பு மாணவி மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது சப்தகிரி அங்கே வந்தார். வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் வெளியே சொல்லி விடுவதாக மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மாணவி கர்ப்பமானார். இது குறித்து மாணவி, சப்தகிரியிடம் கூறினார். இதைத்தொடர்ந்து மாணவியை நைசாக அழைத்துச்சென்று ஒரு கோவிலில் வைத்து தாலிக்கட்டி, மீண்டும் பலாத்காரம் செய்தார். இதற்கிடையே பெற்றோரின் புகார் குறித்து அறிந்த அவர் மாணவியை தனியாக நடுரோட்டில் விட்டுவிட்டு சென்றது தெரியவந்தது.

20 ஆண்டு சிறை

அதைத்தொடர்ந்து இந்த வழக்கு ஈரோடு அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டது. மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, இறைச்சி வியாபாரி சப்தகிரியை கைது செய்தனர். மேலும், அவர் மீது ஈரோடு மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை நீதிபதி ஆர்.மாலதி விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம்சாட்டப்பட்ட சப்தகிரிக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.3 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கவும் தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் எம்.ஜெயந்தி ஆஜராகி வாதாடினார்.


Next Story