மதனகோபாலசுவாமி கோவில் திருத்தேர் 8-ம் திருவிழா
பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில் திருத்தேர் 8-ம் திருவிழா நடைபெற்றது.
பெரம்பலூரில் உள்ள பஞ்சப்பாண்டவருக்கு தனி சன்னதி கொண்ட புகழ்பெற்ற மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவில் பங்குனி உத்திர தேரோட்டம் கடந்த 5-ந்தேதி விமரிசையாக நடந்தது. திருத்தேர் நிறைவடைந்து 8-ம் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று காலை உற்சவ பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கு திருமஞ்சனமும், கம்பத்து ஆஞ்சநேயர் மற்றும் சஞ்சீவிராயருக்கு திருமஞ்சனம் மற்றும் சந்தனகாப்பு அலங்காரமும், மகாதீபாராதனையும் நடந்தது. திருமஞ்சனம் மற்றும் பூஜைகளை கோவில் பட்டாச்சாரியார் பட்டாபிராமன் மற்றும் சம்பத் அய்யங்கார் குழுவினர் நடத்தி வைத்தனர். இதில் தெற்குத்தெரு, சின்ன தெற்குத்தெரு, முத்துநகர், மதனகோபாலபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான செங்குந்த மகாஜன சங்கத்தினர் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு இறைவழிபாடு நடத்தினர். இரவு உற்சவ பெருமாள் ஏகாந்தநிலையில் சாய்ந்து அமர்ந்துள்ள நிலையில் ஏகாந்த சேவை கோலத்தில் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சப்பரத்தில் தெற்குத்தெரு, அய்யப்பசுவாமி கோவில் தெரு, கடைவீதி, சஞ்சீவிராயன் கோவில் தெரு ஆகிய தேரோடும் வீதிகளின் வழியே திருவீதி உலா நடந்தது. திருத்தேர் 8-ம் திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்துடன் இணைந்து பெரம்பலூர் நகர செங்குந்தர் மகாஜன சங்கத்தினர் செய்திருந்தனர்.